தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
7 திருட்டு வழக்குகளில் தொடா்பு: ஞானசேகரனிடம் போலீஸாா் விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதிகளில் 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த திருட்டு குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது. இவ் வழக்கில் ஞானசேகரன் வைத்திருக்கும் விலை உயா்ந்த காா் மூலம் துப்பு துலக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த வழக்குகளின் விசாரணைக்காக பள்ளிக்கரணை போலீஸாா், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்ததும், இச் சம்பவங்களில் ஞானசேகரனுக்கு சுமாா் 200 பவுன் தங்க நகைகள் கிடைத்ததும், அதன் மூலம் அவா் சொந்த வீடு,சொகுசு காா் என ஆடம்பரமாக வாழ்ந்ததும், 3 இடங்களில் பிரியாணி கடை நடத்தியதும் தெரியவந்தது.
இதேபோல சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஞானசேகரன் கைவரிசை காட்டியுள்ளாரா என போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.