மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!
அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
'தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் சோதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்தேன். நேற்று அந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று பழைய நடைமுறைப்படியே கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். சுற்றுப்பயணத்தின்போது விவசாயிகள் வைத்த கோரிக்கையை நான் அனைத்து இடங்களிலும் பேசினேன். ஆனால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, பிரதமரிடம் மனு அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான்.
அதிமுக கூட்டணியில் சசிகலா வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன என்கிற யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.
வட மாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு குறித்து பேசியபோது தென் மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதெல்லாம் முடிந்து போன ஒன்று, இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம். இன்று இந்தியா முழுவதும் மத்திய அரசு ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. அதனடிப்படையில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள்.
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
1976ல் எம்ஜென்ஸி காலத்தில் கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். அதன்பின் பல முறை மத்தியில் ஆட்சி செய்த கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்திருந்தார்கள். அப்பொழுது ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளது, பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன்' என்று பேசியுள்ளார்.