Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவ...
``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் சிறப்பு வாக்காளர் சீர் திருத்தப்பணிக்கான எதிர்ப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. நேற்றிலிருந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நாடாளுமன்றத்தையே அதிர வைத்திருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பை நோக்கிப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
அதில், ``பாகிஸ்தானால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கொடூரமான இதயமற்ற தாக்குதல் பஹல்காம். இளைஞர்கள், முதியவர்கள் இரக்கமின்றி, இரத்தக்களரியாகக் கொல்லப்பட்டனர். அதற்காக இந்த அவையில் உள்ள ஒவ்வொரு நபரும் பாகிஸ்தானைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய தருணத்தில், அது தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இந்திய ராணுவத்துடனும், அரசுடனும் உறுதியாக பாறைப் போல இருப்போம் என உறுதியளித்தன.
அதற்காக ஆளும் தரப்பின் சில தலைவர்களிடமிருந்து கிண்டல் கேலியான கருத்துகளையும் எதிர்க்கொண்டோம். ஆனால் நாங்கள் அதற்கும் எதிர்வினையாற்றவில்லை. இந்தியாவுக்காக இந்திய கூட்டணியின் அனைத்து மூத்த தலைமைகளுக்கும் மௌனமாக இருந்தோம். ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் ஒற்றுமையாக இருந்ததில் மிகவும் பெருமைப்படுகிறோம். நீங்கள் இந்திய ஆயுதப் படைகளைப் பயன்படுத்த விரும்பினால், உங்களிடம் 100% அரசியல் விருப்பமும், முழு செயல்பாட்டு சுதந்திரமும் இருக்க வேண்டும். நேற்று, ராஜ்நாத் சிங் 1971 நிகழ்வையும் ஆபரேஷன் சிந்தூரையும் ஒப்பிட்டு பேசினார்.
1971-ல் அரசியல் விருப்பம் இருந்தது என்பதை நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏழாவது கடற்படை இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'பங்களாதேஷுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாருங்கள்' எனக் கூறி, ஜெனரல் மானெக்ஷாவிடம், '6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்... என்பதுபற்றி முடிவு செய்ய உங்களுக்கு நடவடிக்கை சுதந்திரமும், திட்டமிட நேரமும் தேவை' என முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அதனால்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது.
அப்படியே ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பார்க்கலாமா... நேற்று நான் ராஜ்நாத் சிங்கின் உரையைப் பார்த்தேன். மக்கள் பேசும்போது நான் மிகவும் கவனமாகக் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி, 22 நிமிடங்கள் நீடித்தது என்று அவர் கூறினார்.
பின்னர் அவர் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயத்தைச் சொன்னார். 1.35 மணிக்கு, நாங்கள் பாகிஸ்தானை அழைத்து, `நாங்கள் பாகிஸ்தானின் இராணுவத் தளங்களை தாக்கவில்லை. இராணுவமல்லாத இலக்குகளைத்தான் தாக்கியுள்ளோம். மேலும் நாங்கள் இந்தத் தாக்குதலைத் தொடர விரும்பவில்லை என்று சொன்னோம்..." என்றார்.
அவர் இதைத் தெரிந்துதான் சொன்னாரா அல்லது தெரியாமல் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை அவர் பேசியதன் மூலம் எதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது அவருக்குப் புரியாமல் இருக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூர் நடந்த அன்றிரவு இரவு 1.35 மணிக்கு ஆப்ரேஷனை முன்னெடுக்கும் இந்திய டிஜிஎம்ஓவிடம், பாகிஸ்தானிடம் போர் நிறுத்தத்தைக் கேட்குமாறு இந்திய அரசு கூறியிருக்கிறது. அதாவது நீங்கள் நேரடியாக பாகிஸ்தானிடம் உங்கள் அரசியல் விருப்பத்தைச் சொன்னீர்கள். இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராட உங்களுக்குப் அரசியல் விருப்பமில்லை. அதாவது நீங்கள் போராட விரும்பவில்லை...
ராஜ்நாத் சிங் பேசியதில் இரண்டாவது மிக முக்கியமான விஷயம், பாகிஸ்தானியர்களிடம் `உங்கள் எந்த இராணுவ உள்கட்டமைப்பையும் நாங்கள் தாக்கப் போவதில்லை' என்று அவர் கூறியதாக அவர் கூறினார்... நான் ஒரு தாக்குதலுக்கான திட்டமிடல், இராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் எனச் சொன்னேன். அது இங்கு கேள்விக்குறியாகி நிற்பதை கவனிக்க முடியும்.
இந்தோனேசியாவின் பாதுகாப்புத் துறைத் தலைவர் கேப்டன் சிவக்குமார், `ஆப்ரேஷன் சிந்தூரின் போது இந்தியா பல விமானங்களை இழந்தது' என்றார். அவரின் இந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை என்றாலும், நாம் சில விமானங்களையாவது இழந்தோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
பாகிஸ்தானின் இராணுவத் தளங்களையும் அவர்களின் வான் பாதுகாப்பையும் தாக்கக்கூடாது என அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவால் மட்டுமே இந்த இழப்பு நடந்தது. அதாவது நீங்கள் பாகிஸ்தானுக்குள் செல்லுங்கள்... பாகிஸ்தானைத் தாக்குங்கள்... ஆனால் அவர்களின் இராணுவத் தளம், வான் பாதுகாப்பு அமைப்பைத் தாக்க வேண்டாம் என்று சொல்கிறீர்கள்... அதன் பொருள் என்ன நம் இராணுவத்தின் கையைக் கட்டி களத்தில் இறக்கிவிட்டிருக்கிறீர்கள்.
அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்
நீங்கள் இங்கே எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டிருந்தால், அந்த 5 விமானங்களையும் இழந்திருக்க மாட்டீர்கள்... நம் இராணுவம் எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர்களை குற்றம் சொல்லவும் முடியாது. தவறு செய்ததெல்லாம் நம் நாட்டின் ஆளும் கட்சிதான். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். நீங்கள் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்திரா காந்திக்கு இருந்த தைரியத்தில் 50% இருந்தால் கூட இதை சொல்லிவிட முடியும்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலக நாடுகள் எல்லாம் தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்தன. இது 100 சதவிகிதம் சரி. ஆனால், எந்த ஒரு நாடும் பாகிஸ்தானை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. அதற்கு என்னப் பொருள் உலக நாடுகள் நம்மையும் பாகிஸ்தானையும் ஒரே மாதிரியாகதான் பார்க்கிறது. இந்தத் தாக்குதலுக்காக பாகிஸ்தானின் தீவிரவாதத் தளங்களை தாக்கினீர்கள் சரி. மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் என்ன செய்வீர்கள். அப்போதும் தீவிரவாதத் தளங்களைதான் தாக்குவீர்களா?" என்றார்.