நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்
வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு வேளாண் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவுக்கு கொள்முதல் செய்துள்ளது; விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 1.83 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கைவிட அதிகரித்துள்ளது என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூறமுடியும்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையை அமல்படுத்துவதற்கான முன்மொழிவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிராகரித்தது. எனினும், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை மோடி அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி விவசாயிகள் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கும் கூடுதலாக 50 சதவீத லாபத்தை வைத்து விளைபொருள்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்துவது சந்தைகளை பாதிக்கும் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்தது என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.