உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் ...
நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் சீட்!
சென்னை: நீட் தேர்வு எழுதிய தாயும் மகளும் தேர்ச்சியடைந்துள்ளதால் இருவருக்கும் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதைக் கடந்துவிட்ட மாற்றுத்திறனாளியான அமுதவள்ளி மணிவண்ணன் தனது விடாமுயற்சியால் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, இன்று(ஜூலை 30) தொடங்கிய மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று அதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த அமுதவள்ளிக்கு அன்றைய காலகட்டத்தில் மருத்துவப் படிப்பு பயில வாய்ப்பு கிட்டாமல் போனது. ஆனால் இப்போது, நீட் தேர்வில் உச்சப்பட்ச வயது என்னும் வரையறை நிர்ணயிக்கப்படாததால் தமது நெடுங்கால கனவு நிறைவேறியுள்ளதாக அமுதவள்ளி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். பிசியோதெரபிஸ்ட் படிப்பு பயின்று சேவையாற்றி வந்த அமுதவள்ளி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவருடைய மகளான எம். சம்யுக்தா தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது தாயாருக்கும் மருத்துவராக வேண்டுமென்ற தமது சிறு வயது ஆசை மீண்டும் துளிர்விட்டது. அதன் விளைவு, மகளுடன் தாயும் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சியடைந்துள்ளனர். சம்யுக்தா பொதுப்பிரிவு கலந்தாய்வில் விரைவில் கலந்து கொள்கிறார்.
தென்காசியிலுள்ள ஒரு குடும்பத்தில் ஒரே வீட்டில் இனி இரு டாக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார்கள் குடும்பத்தினர்! நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த அமுதவள்ளி மணிவண்ணனுக்கு பாராட்டு குவிகிறது.