அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!
ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் அதிக ரிஸ்க் அதிக லாபம் தரும் எனக் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
கடைசி டெஸ்ட் ஓவலில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.
இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) எடுத்த அவர் இது பற்றி பேசியதாவது:
அதிக ரிஸ்க் எடுத்துவிட்டேன்
இது அதிக ரிஸ்க், அதிக பலன் போன்றது. ரிஸ்க் அதிகமாக எடுத்ததால் இப்படியாகிவிட்டது. என்னுடைய எந்த வீரர் ஒருவருக்கும் இப்படி காயம் ஏற்பட நான் விரும்பவில்லை.
தற்போது காயத்திலிருந்து குணமடைய தொடங்கியிருக்கிறேன். அடுத்த தொடரில் கவனம் செலுத்துகிறேன்.
ஆஷஸ் தொடருக்கு முன்பு இப்படியானது வருத்தம்தான். இந்தமாதிரி முடிவுகள் எடுக்க அதிக நேரத்தை வழங்குவேன்.
என்னால் உச்சரிக்க முடியாத தசையொன்று நன்றாகவே கிழிந்திருக்கிறது. அதன்பெயரை என்னால் உச்சரிக்க தெரியவில்லை (சிரிக்கிறார்).
பேட்டிங் மட்டும் செய்திருக்கலாம், ஆனால்...
ஸ்கேன் எடுத்ததுமே பந்துவீச முடியாது எனத் தெரிந்தது. பின்னர் மருத்துவக் குழுவுடன் 20 நிமிடம் உட்கார்த்து இந்த முடிவுக்கு வந்தோம்.
களத்தில் இருக்கும்போது எதைச் செய்தாவது வெல்ல வேண்டுமென நினைப்பேன். அதனால், பணிச்சுமை எல்லாம் எனக்கு தெரியவில்லை.
நான் பேட்டராக மட்டுமே விளையாடியிருக்கலாம். ஆனால், வெற்றிபெற 4 வேகப் பந்துவீச்சாளர்கள் வேண்டும். அதனால், இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றார்.