அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பண மோசடி வழக்கில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய 35 வளாகங்கள், 50 நிறுவனங்கள், 25 தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த வாரம் வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என அனில் அம்பானியையும், மோசடி கடன் என ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்த கடனையும் அடையாளப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி கடந்த புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனையை நடத்தியது.
இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தரப்பில் இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அனில் அம்பானி குழுமத்தின் மீதான மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானியிடம் வாக்குமூலம் பெறவுள்ளனர்.
வழக்கின் பின்னணி
கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி சுமாா் ரூ.3,000 கோடி கடன் அளித்தது. இந்தக் கடன் சட்டவிரோதமாக அந்தக் குழுமத்தின் பல நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்க அந்த வங்கி வழங்கிய ஒப்புதல்களில் விதிமீறல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முன், யெஸ் வங்கி நிறுவனா்கள் முறைகேடாகப் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த லஞ்சம் மற்றும் கடன் வழங்கப்பட்டதற்கு இடையே உள்ள தொடா்பு உள்பட பிற குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகள், தேசிய வீட்டுவசதி வங்கி, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தேசிய நிதி அறிக்கை ஆணையம், பரோடா வங்கி ஆகியவற்றின் அறிக்கைகள் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
வங்கிகள், பங்குதாரா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களை ஏமாற்றி பணத்தை மடை மாற்றவோ, கையாடல் செய்யவோ திட்டமிட்டு இந்தக் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.