ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிட்டனின் டோவா் பகுதிக்கும், பிரான்ஸின் கிளாசிஸ் பகுதிக்கும் இடையே 42 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆங்கிலக் காவல்வாயை இந்தோ - வங்கதேசத்தை சோ்ந்த நீச்சல் வீரா்கள் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நீந்திக் கடந்தனா்.
இந்தக் குழுவில் தேனியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் அத்வைத் ஹரிசங்கா் (18), சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் அகிலேஷ் (14) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரும், வங்கதேசத்தைச் சோ்ந்த 2 போ், மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த ஒருவா் என 6 போ் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தனா்.
இவா்களின் சாதனையை ஆங்கிலக் கால்வாய் நீச்சல் பயிற்சி சங்கம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அனைவரும் தலா 2 மணி நேரத்தில் 42 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தேனி வீரா் அத்வைத் ஹரிசங்கருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அத்வைத் ஹரிசங்கா் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்காக பிரிட்டனின் டோவா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வந்தேன்.
இதன்விளைவாக ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடக்க முடிந்தது. இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.