House Mates Review: `இது புதுசு சாரே!' - எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறதா இந்த ஹாரர் ஃபேண்டஸி?
பெற்றோரை இழந்த தர்ஷன், தன் காதலி அர்ஷா சாந்தினி பைஜூவை அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை, இன்னொருவரிடமிருந்து விலைக்கு வாங்கி, மனைவியோடு குடியேறுகிறார். தர்ஷன் வேலைக்குச் சென்ற பின், வீட்டில் அமானுஷ்யச் சம்பவங்கள் நடக்க, அர்ஷா பயந்து, அதை தர்ஷனிடம் சொல்கிறார்.
முதலில் நம்ப மறுக்கும் தர்ஷன், அவரே நேரடியாக அதை அனுபவித்த பின் நம்புகிறார். அந்த அமானுஷ்யங்களின் பின்னணியைத் தேடிச் செல்லும் தம்பதிக்குக் கிடைக்கும் அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும், நெகிழ்ச்சிகளுமே அறிமுக இயக்குநர் டி. ராஜவேல் இயக்கியிருக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்' திரைப்படம்.

ரொமான்ஸ், மனைவியுடனான கோபம், பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு முழிப்பது போன்றவற்றில் பாஸ் ஆகும் தர்ஷன், இறுதிக்காட்சிக்கு முந்தைய எமோஷன் ஏரியாவில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
ரகளை, இரக்கம், ஆற்றாமை எனப் படத்தின் எமோஷனல் அடுக்குமாடியை முழுவதுமாக தோளில் சுமந்து, படத்திற்கு வலுசேர்க்கிறார் காளி வெங்கட். இறுதிக்காட்சியில் அவரின் நடிப்பு இந்த வீட்டிற்கு உயிரூட்டியிருக்கிறது.
வினோதினி வைத்தியநாதனின் நடிப்பு காமெடி, எமோஷன் ஏரியாவில் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது என்றாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் நடிப்பு தொந்தரவாகவும் அமைந்திருக்கிறது.
அர்ஷா சாந்தினி பைஜூ பெரிய தாக்கம் தராமல் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார். சிறுவன் ஹென்ரிக் அஷ்லேவிடமிருந்து செயற்கைத்தனமில்லாத மழலை நடிப்பை வாங்கி, க்யூட்னஸ்ஸை அள்ள வைத்திருக்கிறார் இயக்குநர். அப்துல் லீ, கே.பி.ஒய் தீனா ஆங்காங்கே இருப்பினைப் பதிவு செய்கிறார்கள்.

வெவ்வேறு காலகட்டங்கள், அவை திரையில் ஒன்றாக இணையும் தருணங்கள், அவற்றைத் துருத்தலின்றி சுவாரஸ்யமாக திரையாக்கம் செய்த விதம் எனத் தொழில்நுட்ப ரீதியாக இந்த ஹவுஸுக்கு பேஸ்மண்ட்டாக நிற்கிறது ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் - படத்தொகுப்பாளர் நிசார் ஷரெப் கூட்டணி.
இருவேறு காலகட்டங்களில் இருக்கும் ஒரே வீடு, அதன் அறைகள், சுற்றம் என அனைத்தையும் நுணுக்கமாக வேறுபடுத்திய விதம் போன்றவற்றில் கவனிக்க வைக்கிறார் கலை இயக்குநர் என்.கே.ராகுல்.
ராஜேஷ் முருகேசன் இசையில் 'அக்கலு பக்கலு' பாடல் ரசிக்க வைக்கிறது. அதேபோல, எமோஷன் அறையையும், காமெடி அறையையும் ஆர்ப்பாட்டமில்லாத தன் பின்னணி இசையால் நிறைத்திருக்கிறார்.

தர்ஷன் - அர்ஷா காதல், அதை எதிர்க்கும் காதலியின் அப்பா, அதை மீறிய திருமணம், டூயட் பாடல், வழக்கமான பேய்ப் பட அமானுஷ்ய சம்பவங்கள், முதலில் பாதிக்கப்படும் கதாநாயகி, அதை நம்ப மறுக்கும் கதாநாயகன் எனத் தொடக்கத்தில், வழக்கமான திரைக்கதையும் பழக்கப்பட்ட காட்சிகளும் அணிவகுக்க, அயர்ச்சி தலைதூக்குகிறது.
முதற்பாதியின் பாதிக்குப் பின், அமானுஷ்யத்தின் பின்னணி விரியும் காட்சி நல்லதொரு ட்விஸ்டாக அமைந்து, சுவாரஸ்யத் தீயைப் பற்ற வைக்கிறது.
அதிலிருந்து இடைவேளை வரையிலுமான காட்சித் தொகுப்பு காமெடி, திருப்பங்கள் எனக் கலந்துகட்டி வந்து, சுவாரஸ்யத்தை ஏற்றிக்கொண்டே செல்கின்றது. படத்தின் அச்சாரமாக இருக்கும் அந்த ட்விஸ்ட்டையும் அதை விவரிக்கும் காட்சிகளையும், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என மொத்த ஹவுஸ்ட் மேட்ஸும் சேர்ந்து மெருகேற்றியிருக்கிறார்கள்.

காமெடி கலாட்டாவாகத் தொடங்கும் இரண்டாம் பாதி, சிறிது நேரத்தில் எமோஷனையும் சேர்த்துக்கொள்கிறது. காமெடியான ஐடியாக்களும், அதன் தொடர்ச்சியாக வரும் எமோஷன் மீட்டரும் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன.
முக்கியமாக, எம்.எஸ். தோனியின் வின்னிங் சிக்ஸ், 2012-ல் சென்னையில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள், சிறுவனின் பிறந்தநாள் கொண்டாடக் காட்சிகள் போன்றவை விறுவிறுப்பையும், கலகலப்பையும் கச்சிதமாகக் கடத்தி கைதட்டல் வாங்குகின்றன.
அதேநேரம், காளி வெங்கட் தொடர்பான காட்சிகளிலிருக்கும் எமோஷன் டெம்ப்ரேசருக்கு ஈடாக, தர்ஷன் தம்பதிகளின் எமோஷன் காட்சிகள் இல்லாததால், ஆங்காங்கே சுவாரஸ்யம் தடைப்படுகிறது.
இறுதிக்காட்சியை நோக்கி நகரும் இரண்டாம் பாதியின் இறுதிப்பகுதி, யூகிக்கும் படியாக ட்விஸ்ட்களிலிருந்து விலகி, சில சர்ப்ரைஸ்களை அளித்து, பரபரவென நகர்ந்தாலும் அதில் போதுமான நிதானமும் தெளிவுமில்லாததால், ஆங்காங்கே சிறு குழப்பங்களும் இந்த ஹவுஸிற்குள் குடியேறுகின்றன.

அதோடு, இயக்குநர் கட்டமைத்திருக்கும் உலகிற்குள்ளேயே லாஜிக் மீறல்கள் முளைப்பது சுவாரஸ்யத்தை நசுக்குகின்றன. இவற்றைத் தாண்டி, எமோஷன்கள் நிறைந்து வழியும் க்ளைமாக்ஸை முமுதாகக் கையிலெடுக்கும் காளி வெங்கட், தன் நடிப்பால் நம் மனதைக் கனக்க வைக்கிறார்.
ட்விஸ்ட், எமோஷன், காமெடி எனத் தேவையான அறைகளோடு சுவாரஸ்யம் தந்து, நம்மையும் வீட்டிற்குள் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு நெகிழ வைக்கிறது இந்த 'ஹவுஸ் மேட்ஸ்'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...