ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!
GV Prakash: "பிரபஞ்சத்துக்கு நன்றி" - வாத்தி படத்துக்காக தேசிய விருது பெறும் ஜி.விபிரகாஷ்
71வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருதைப் பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ்.
தேசிய விருது பெற்றது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ். "இரண்டாவது முறை வந்த ஆசீர்வாதம்" என விருதைக் குறிப்பிட்டுள்ளார்.
GV Prakash அறிக்கை!
அந்த அறிக்கையில், "71வது தேசிய திரைப்பட விருதில் ‘வாத்தி’ திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்திருப்பதில் நெஞ்சார்ந்த நன்றியும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

மதிப்புக்குரிய ஜூரிக்கும் தேர்வு குழுவினருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இந்த அழகான பயணத்தில் உடன்வந்த வாத்தி படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி." எனக் கூறியுள்ளார்.
‘பொல்லாதவன்’ முதல் ‘இட்லி கடை’ வரை...
மேலும், "இந்த படத்துக்காக என்னைத் தேர்வு செய்த சகோதரர் தனுஷுக்கு சிறப்பு நன்றி. ‘பொல்லாதவன்’ முதல் ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘இட்லி கடை’ வரை நாங்கள் தொடர்ச்சியாக இணைந்து வேலை செய்வது, எங்கள் இருவருக்கும் படைப்பாற்றல் நிறைவைத் தருவதாகவும், பலனளிக்கும் அனுபவமாகவும் இருந்து வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த படத்திலும் இணையும் வெங்கி - ஜிவி
இயக்குநர் வெங்கி அட்லூரி குறித்து, " என்னுடைய இயக்குநர் வெங்கி அட்லுரிக்கு மிகப் பெரிய நன்றி, அவர்தான் என்னுடைய சிறந்த இசையை வெளிக்கொண்டுவர எனக்கு உந்துதலாக அமைந்தார், இந்த படத்தின் இசைக்காக என்னை நம்பினார்.
வாத்தி முதல் லக்கி பாஸ்கர் வரை, இப்போது எங்கள் அடுத்த படத்திற்கும் - தொடர்ந்து நம்பிக்கை வைப்பதற்கும் நமது பயணத்தில் ப்ளாக்பஸ்டர் தருணங்களை ஏற்படுத்துவதற்கும் நன்றி வெங்கி." என எழுதியுள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அவரது குடும்பம், இசைக்கலைஞர்கள் குழு, பாடாலாசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை நம்பியதற்காகவும் ஆதரவளிப்பதற்காகவும் நன்றி கூறினார்.
"பிரபஞ்சத்துக்கு நன்றி
அன்புடன்
ஜிவி" என அந்த அறிக்கை முடிவு பெற்றது.
சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்கிங்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் இயக்குநர் ராம் குமாருக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதும், எம்.எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.