முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராமதாஸ்: `தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ - என்ன பேசினார்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ராமதாஸிடம், இருவருக்குமான உரையாடல் குறித்தும், தேர்தல் கூட்டணியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
"தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் நன்றாக இருக்கிறார். விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.
தமிழக முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. குணமடைய வாழ்த்துகளை தெரிவிப்பது என் வழக்கம். அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை." எனக் கூறினார் ராமதாஸ்.

தேர்தல் ஆணையத்தின் நேற்றைய அறிக்கையில் அன்புமணி வசிக்கும் சென்னை, தி.நகர் வீடு பாமக-வின் கட்சி அலுவலகமாகக் கூறப்பட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "நான் இருக்கும் இடம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. தைலாபுரம் தான் தலைமை அலுவலகம்" எனப் பதிலளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்றக் கேள்விக்கு, "யார் யார் உரியவர்கள் என்பதைக் கட்சி தீர்மானிக்கும். அவர்களுக்கு அழைப்பு போகும்" எனப் பதிலளித்தார்.
இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் 09ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.