ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை...
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.
அதோடு இவ்வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி புரோஹித் உட்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி லஹோதி 1000 பக்க தீர்ப்பை வழங்கி இருந்தார். அதில் சாட்சி மிலிந்த் ஜோஷி ராவ் என்பவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்திர குமார், சுவாமி அசிமானந்த், பேராசிரியர் தியோதர் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறும்படி தனக்கு நெருக்கடி கொடுத்தனர்.

அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால்தான் என்னை விட்டுவிடுவோம் என்று கூறி என்னை ஒரு வாரம் தீவிரவாதத் தடுப்புப் படையினர் தங்களது காவலில் வைத்திருந்தனர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே தீவிரவாதத் தடுப்புப் படையில் இடம் பெற்று இருந்த இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் என்பவர் தன்னிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தைக் கைது செய்யும்படி கூறி அனுப்பி வைத்தனர் என்று கூறி இருந்தார். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
இதே போன்று மாலேகாவ் குண்டு வெடிப்பை நடத்தியதாகக் கூறப்படும் அபினவ் பாரத் இந்து அமைப்பில் பல முக்கிய ராணுவ வீரர்களுக்குப் பங்கு இருப்பதாக சிறப்பு நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரி புரோஹித் தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
குண்டு வெடிப்பின் போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளைக் களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.