Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு முன்னர் பீகாரின் 243 தொகுதிகளில் 7.93 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், தற்போது இந்த நடவடிக்கையில் தாங்கள் கேட்டிருந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து 7.23 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் உறுதி செய்துவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதற்கான பட்டியலை வெளியிட்டிருக்கும் தேர்தல் ஆணையம், வாக்காளர் தங்களின் பெயர்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது.
விடுபட்டவர்கள் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளக் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், "வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. நான் எப்படித் தேர்தலில் போட்டியிடுவது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மொத்தம் சுமார் 65 லட்சம், அதாவது சுமார் 8.5 சதவிகித வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
#WATCH | Patna, Bihar: "My name is not there in the electoral roll. How will I contest the elections?" asks RJD leader Tejashwi Yadav, as his EPIC number is unable to fetch his name in the electoral roll. pic.twitter.com/eF2VkeNIRw
— ANI (@ANI) August 2, 2025
தேர்தல் ஆணையம் விளம்பரத்தை வெளியிடும்போதெல்லாம், பலர் இடம்பெயர்ந்துவிட்டனர், பலர் இறந்துவிட்டனர், பலர் போலி பெயர்களைக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கிய பட்டியலில் புத்திசாலித்தனமாக, எந்த வாக்காளரின் முகவரியையும், பூத் எண்ணையும், EPIC எண்ணையும் கொடுக்கவில்லை.
இதனால் வாக்காளர் பட்டியலிலிருந்து யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முடியாது" என்று கூறினார்.

இருப்பினும், தேஜஸ்வி யாதவ்வின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், "வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் 416 மற்றும் EPIC எண் RABO456228.
அவர் தனது பழைய EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடியிருக்கலாம், அதனால் தனது விவரங்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை." கூறியிருக்கிறது.