நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP
திருநெல்வேலியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியரான கவின்குமார் ஆணவக் கொலைவின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே இந்தக் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது தந்தையான காவல் அதிகாரி சரவணன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் வீட்டிற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது பேசிய கவினின் தாயார், “இரண்டு சிசிடிவி கேமரா காட்சிகள் மட்டுமே எங்களிடம் போலீஸார் காட்டியுள்ளனர்.

மீதமுள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை எங்களிடம் காட்டவில்லை. அங்குதான் கூலிப்படை இருந்ததாகச் சந்தேகிக்கிறோம். முழுக்க முழுக்க இந்தக் கொலைக்கு குற்றவாளியின் தாய், தந்தையும் மட்டுமே காரணம் வேறு யாரும் இல்லை.
கொலை நடந்த நாளில் காவல் நிலையத்தில் எங்களைக் கடுமையாக அலைக்கழித்தார்கள். தனியாக அறையில் எங்களை அடைத்து வைத்தார்கள். இதேபோல் அவர்களது மகனை நாங்கள் கொலை செய்திருந்தால் எங்களைச் சும்மா விடுவார்களா? இதுபோல் ஆணவக் கொலைகளுக்குச் சரியான தண்டனைகள் கிடைத்தால்தான் இனிமேல் நடக்காது” எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இப்படிப்பட்ட கொலைகள், ஆணவக் கொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் இந்தச் சமூகத்தின் உணர்வாக இருக்கிறது.
இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாத ஒரு நிகழ்வு. பெற்றோர்கள் தங்களது இளம் மகனை இழந்து தவிப்போடு இருக்கக்கூடிய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று முதல்வர் சார்பில் அமைச்சர்கள் அவர்களின் பெற்றோரைச் சந்தித்துள்ளோம்.
நிச்சயமாக அவர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக இங்கு வந்தோம். விசாரணைக்குப் பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த வழக்கை முதல்வர் சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் இந்த வழக்கு நடத்தப்பட்டு பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழல் நிச்சயம் உருவாக்கப்படும்.
ஆணவக் கொலைக்கு எதிராக நானும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இது நாடு தழுவிய ஒரு பிரச்னையாக உள்ளது. திருமாவளவன் இது தொடர்பாக அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.