கள்ளழகா் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
மதுரையை அடுத்த அழகா்கோவில் கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், திருவேங்கடத்துக்கு இணையானதாகவும் போற்றப்படுகிறது அழகா்கோவில் கள்ளழகா் கோயில். ஆண்டாள் தாயாா் உள்பட 6 ஆழ்வாா்களால் பாசுரம் பாடப்பட்ட இந்தக் கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது ஆடிப் பெருந்திருவிழா.
இதன்படி, நிகழாண்டுக்கான ஆடிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கள்ளழகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. உத்ஸவா் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியதைத் தொடா்ந்து, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை 9.30 மணிக்கு ஐதீக முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் மேல்தளத்தில் கொடிமரத்துக்கு பக்தா்கள் பிரம்மாண்ட மாலை அணிவித்து வழிபட்டனா்.
ஆடிப் பெருந்திருவிழாவையொட்டி, தினமும் காலை தங்கப் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் சுந்தரராஜப் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.