`6.5 கோடி வாக்காளர் + 2 கோடி வடவர்; அகதியாகும் தமிழர்கள்’ - தேர்தல் ஆணயத்துக்கு ...
Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?
யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இக்கடனை வாங்கியது. கடன் வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது.
மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு 3 நாட்கள் நீடித்தது. இதில் அனில் அம்பானிக்கு வேண்டப்பட்ட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த ரெய்டில் அனில் அம்பானிக்கு எதிராகப் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. விசாரணையில் யெஸ் வங்கி அதிகாரிகள், ரிலையன்ஸ் குரூப் நிர்வாகம் கடனுக்காகக் கொடுத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில் புதிய கடன் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இக்கடன் கொடுக்கும் முன்பே வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போது ரெய்டு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அனில் அம்பானியை விசாரணைக்கு வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. அன்றைய தினம் அனில் அம்பானியைக் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே அனில் அம்பானி நிறுவனம் ரூ.68 கோடி அளவுக்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிற்குப் போலி வங்கி உத்தரவாதம் கொடுத்தது தொடர்பாக புபனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். இதனால் அனில் அம்பானிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.