ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர்.
கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். களஞ்சியம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி போனதால் இவரது மனைவி மற்றும் மகன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் களஞ்சியம் நேற்று இரவு மண்டபம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றின் வாசலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த களஞ்சியத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த மண்டபம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று களஞ்சியத்தின் உடலை கைபற்றினர். அதனை தொடர்ந்து களஞ்சியத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்த பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்ற நிலையில் அப்படியே நின்று விட்டது. இந்நிலையில் களஞ்சியம் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த வாரம் அங்கு புரோட்டா வாங்க வந்த நபர் ஒருவர் புரோட்டாவிற்கு கூடுதலாக சால்ணா கேட்ட போது களஞ்சியம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக மண்டபம் டி.நகரை சேர்ந்த சக்திவேல், கார்த்திக் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மண்டபம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் தொழிலாளி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், போதைக்கு அடிமையானவர். இவர் நேற்று இரவு மண்டபம் டாஸ்மாக் கடை அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காளிதாஸின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினர்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காளிதாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் ராமேஸ்வரம் சரகத்தில் மட்டும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மண்டபத்தில் இருவர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.