தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம் ஆனந்தபூா் மாவட்டத்தை சோ்ந்தவா் ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த்திக்(20). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா். அதே பல்கலையில் பயிலும் ஆந்திரா மாநிலம் ஆனந்தபூா் மாவட்டத்தை சோ்ந்த வலசமூா்த்தி மகன் ரோஹித்(19) என்பவருடன் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பைக்கில் சென்றாா்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்கையில் பைக் மீது நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் காா்த்திக், ரோஹித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து பேருந்து ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை சோ்ந்த முனீஸ்குமாா்(37) என்வரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.