மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் விமரிசனம் செய்துள்ளது.
இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.
மேலும், இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வா்த்தகப் பற்றாக்குறை உள்ளது. எனவே, 25 சதவிகித வரியுடன் அபராதத்தையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிமுதல் அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்த வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.
இந்நிலையில், மோடி-டிரம்ப் இடையிலான நட்பை காங்கிரஸ் விமரிசனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையிலான நடப்புக்கு அர்த்தம் இல்லை.
அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் மோடி இந்திராவிடம் இருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், இந்தியா மீதான டிரம்பின் அணுகுமுறை மேலும் மேலும் வலுத்து வருகிறது.
மே 10 முதல் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக நான்கு வெவ்வேறு நாடுகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 30 முறை கூறியுள்ளார்.
ஜூன் 18 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியை வெள்ளை மாளிகையில் மதிய உணவிற்கு வரவேற்றார்.
ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 25 சதவிகித வரி விதித்தார், ரஷியாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதல்களுக்கு கூடுதல் அபராதம் விதித்தார். மேலும், ஈரானுடன் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருள்கள் வர்த்தகம் மேற்கொண்டததற்காக குறைந்தது 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்தார்.
அதே நாளில், பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை ஆராய்ந்து மேம்படுத்துவதில் அமெரிக்கா உதவும் என்றும் டிரம்ப் அறிவித்தார். இது ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து பாகிஸ்தானுக்குப் பெற்றுள்ள நிதி உதவியிலிருந்து வேறுபட்டது.
தற்போது பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அதிபர் ஷி ஜின்பிங்குடன் முன்பு செய்ததைப் போலவே, அதிபர் டிரம்புடனான தனது தனிப்பட்ட நட்பிலும் நிறைய முதலீடு செய்துள்ளார். ஆனால் இப்போது இரு தலைவர்களும் தங்கள் ஈகோ மற்றும் சுயநல இயல்பு மூலம் தங்களை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் அதானி என்ற ஒரே ஒரு நபருக்காக மட்டுமே வேலை செய்கிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து சிறு வணிகங்களையும் அழித்துவிட்டனர். இந்த ஒப்பந்தம் நடக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள், இந்த ஒப்பந்தம் எப்படி நடக்கும் என்பதை டிரம்ப் தீர்மானிப்பார்.
மோடி டிரம்ப் சொல்வதை மட்டுமே செய்வார்.
இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகம் முழுவதும் தெரியும் - இந்தியாவின் பொருளாதாரம் ஒரு 'இறந்த பொருளாதாரம்' மற்றும் பாஜக இந்திய பொருளாதாரத்தை அழித்துவிட்டது. அது ஏன் அழிக்கப்பட்டது - அதானி என்ற ஒரு மனிதருக்கு உதவுவதற்காக அது அழிக்கப்பட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சர் நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் சிறந்தது என்று கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா இந்தியாவை துஷ்பிரயோகம் செய்கிறது, மறுபுறம், சீனா நம்மைப் பின்தொடர்கிறது என ராகுல் கூறியுள்ளார்.