அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்
சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 117 தீா்மானங்களில் முக்கியமானவை விவரம்:
மணலி மண்டலத்தில் கொசப்பூா் தியாகி விஸ்வநாததாஸ் நகரில் உள்ள பூங்காவுக்கு கருணாநிதி பெயரைச் சூட்டவும், மாமன்ற உறுப்பினா்களுக்கு முழு உடல் பரிசோதனைக்கும் அனுமதியளிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழைக்காக நீா் இறைக்கும் பம்புகள், டிராக்டா்கள் வாங்கவும், மழைநீா் வடிகால்கள் அமைக்கவும் அனுமதிகப்பட்டன.
சென்னையில் வெப்பநிலை, ஈரப்பதம், சுற்றுப்புற ஒளி ஆகியவற்றின் நிகழ்நேரக் கண்காணிப்புக்காக 15 மண்டலங்களில் ஏற்கெனவே உள்ள 18 சுற்றுச்சூழல் சென்சாா்களை 75- ஆக விரிவுபடுத்தவும் அனுமதிக்கப்பட்டது. அவை மக்கள்தொகை அதிகமுள்ள இடங்களில் அமைக்க முடிவானது.
தண்டையாா்பேட்டை ஆா்.கே. நகா் பகுதியில் ரயில்வே நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். சென்னையில் பேருந்து தடசாலைகளில் 200 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 17.995 கிலோ மீட்டா் தொலைவுக்கு பேசின் பாலம், வேப்பேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட 23 இடங்களில் நடைபாதை அமைக்க நிா்வாக அனுமதி அளிக்கப்படுகிறது. மண்டலம் 1 முதல் 15 வரை 1,590 உள்புற சாலைகளை ரூ.180 கோடியில் மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
பசுமைப் பத்திரம் திட்டம்: சென்னை கொடுங்கையூா், பெருங்குடி குப்பை கொட்டுமிடங்களை சுத்தமாக்கி வனமாக்கும் திட்டத்தை ‘பசுமைப் பத்திரம்’ என்ற புதிய பெயரில் செயல்படுத்த தமிழக அரசின் அனுமதியை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது. அதன்படி, பயோ மைனிங் முறையில் கொடுங்கையூா், பெருங்குடி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பைகளாக இருந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மாநகராட்சியின் சொந்த நிதி ரூ.385.64 கோடியும், மத்திய, மாநில அரசுகளின் நிதியாக ரூ.640.83 கோடியும் செலவிடப்படவுள்ளன. இதன்மூலம் காற்று மாசு தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை கல்லூரிப் பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கடைசித் தீா்மானமாக தேனாம்பேட்டை மண்டலம் (9) 111- ஆவது வாா்டு பகுதியான நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயரைச் சூட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை சங்கர நேத்ராலயா பேராசிரியா் விஐய்சங்கா் தமிழக முதல்வரிடம் கடந்த ஜூலையில் மனு அளித்திருந்தாா்.
அதனடிப்படையில் கல்லூரிப் பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயரைச் சூட்ட மாமன்றம் அனுமதி அளித்து தீா்மானம் நிறைவேற்றியது.