ஜாலியன் வாலாபாக் படுகொலை; பழிதீர்ப்பும்; வீர மரணமும் - சர்தார் உதம் சிங் நினைவு தின கட்டுரை!
இந்திய வரலாற்றிலேயே பிரிட்டிஷாரால் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடிய சம்பவமாக இன்றளவும் பார்க்கப்படுவது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில் கொல்லப்பட்ட தன் நாட்டு மக்களுக்கு நீதியை பெற்று தர, அந்த படுகொலைக்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை அவருடைய நாட்டிற்கே சென்று தன் கரங்களால் சுட்டு கொன்று பழிதீர்த்த காரணத்திற்க்காக,1940 ஜூலை 31 அன்று தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நாட்டுமக்களுக்காக உயிர்த்தியாகம் செய்தவர் தான் சர்தார் உதம் சிங். அவருடைய நினைவு நாளில் அவரின் வரலாற்றை எடுத்தியம்புகிறது இந்த கட்டுரை.

சர்தார் உதம் சிங்
டிசம்பர் 26,1899 ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சுனாமின் பில்காட் பகுதியில் பிறந்தவர் உதம் சிங். சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தன் பெற்றோர்கள் இருவரையும் இழந்து, அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். உதம் சிங்கின் மூத்த சகோதரரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட , முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய ராணுவப்படையில் அதிகாரிகளை வற்புறுத்தி இணைந்தார். ராணுவத்தில் இணைந்தவுடன் 32 வது சீக்கிய ராணுவப் படையில் நியமிக்கப்பட்டார். ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் சக வீரர்களுடன் ஏற்பட்ட மோதலால் மீண்டும் அனாதை இல்லத்திற்கு திரும்பினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஏப்ரல் 13,1919 ஆம் ஆண்டு, இந்தியர்களை விசாரணையின்றி கைதுசெய்து சிறையில் அடைக்கும் அடக்குமுறை சட்டமான ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது .இந்த சட்டத்தை எதிர்த்து அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கூடினர். அப்போது பஞ்சாபின் ஜெனரல் ரெஜினால்ட் டையர் மற்றும் மைக்கேல் ஓ'ட்வையர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையில் எவ்விதமான முன்னெச்சரிக்கைகள் இன்றி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பல நூறு பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்திய வரலாற்றில் இந்த சம்பவம் கொடூர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு
பிரிட்டிஷ் ராணுவம் தன் நாட்டு மக்கள் மீது நிகழ்த்திய இந்த மிருகத்தமான செயல் உதம் சிங்கிற்கு கடும் கோபத்தையும், பிரிட்டிஷ் அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணத்தையும் தோற்றுவித்தது. இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு இந்திய சுதந்திர போராட்டத்தில் உதம் சிங்கின் ஈடுபாடு தீவிரமடைந்தது. 20 வயதிலேயே ஆயுதம் வைத்திருந்ததற்காக பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட பின்னும் துவண்டுவிடாமல் சிறையில் இருந்த காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களின் புரட்சிகர சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டார். ஆயுதம் ஏந்தி பிரிட்டிஷாரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கதர் கட்சியினரால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திரதிற்காக போராட தீர்மானித்தார்.
லண்டன் பயணம்
1934 ஆம் ஆண்டு, உதம் சிங் லண்டன் நகரை சென்றடைந்தார். அங்கு நகரின் முக்கிய பகுதியில் தங்கி, தனது அன்றாட தேவைகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட தச்சு வேலை மற்றும் இயந்திர வேலைகளை செய்துவந்தார். பிரிட்டிஷ் உளவுப்படை தன்னை கண்காணிப்பதை தவிர்க்க பல தந்திர வழிகளை பயன்படுத்தினார். இங்கிலாந்தில் ,இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதித்து வந்த இந்திய தொழிலாளர் சங்கம் மற்றும் தேசியவாத இயக்கங்களின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்றார். உதம் சிங் லண்டன் வாழ்க்கையை தொடர்ந்துகொண்டே பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ'ட்வையரை படுகொலை செய்வதற்கு கவனமாக திட்டம் தீட்டினார்.

மைக்கேல் ஓ'ட்வையர் படுகொலை
1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய மக்களுக்கு நீதியை பெற்றுத்தர சபதம் ஏற்றிருந்த சிங், இந்த கோர சம்பவம் நிகழ காரணமாக இருந்த பஞ்சாபின் கவர்னர் மைக்கேல் ஓ'ட்வையரை படுகொலை செய்வதற்கே லண்டன் வந்திருந்தார். பல நாட்கள் திட்டம் தீட்டி, மார்ச் 13,1940 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் லண்டனின் காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மைக்கேல் ஓ'ட்வையரும் பங்கேற்றிருந்தார். அப்போது தனது கோர்டுக்குள் ஒரு ரிவால்வரை மறைத்துவைத்துக்கொண்டு கூட்டம் நடைபெறும் ஹாலுக்கு சென்றார் உதம் சிங்.
பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்து, மைக்கேல் ஓ'ட்வையர் பேச துவங்கியதும் உதம் சிங் தனது இருக்கையில் இருந்து எழுந்து ஓ'ட்வையரை நோக்கி பலமுறை சுட துவங்கினார். அதில் இரண்டு குண்டுகள் அவரை தாக்கி காக்ஸ்டன் ஹாலிலேயே அவர் கொல்லப்பட்டார். அதன் பின் உடனடியாக பிரிட்டிஷாரால் கைதுசெய்யப்பட்ட உதம் சிங், தன்னுடைய செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் , ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு தான் பழிவாங்கியதாக வாக்குமூலம் அளித்தார். உதம் சிங் செய்த இந்த கொலையின் மூலம் ஜாலியன் வாலாபாக் கொலை கொடூரங்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான பிரிட்டிஷாரின் அடக்குமுறைகள் போன்றவை வெளிச்சத்திற்கு வந்தன. உதம் சிங் செய்த இந்த படுகொலை வெறுமெனே பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல் பிரிட்டிஷ் காலணித்துவத்தின் வன்முறைகள், இந்தியர்களிடையே காணப்படும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
விசாரணையும், தண்டனையும்
மைக்கேல் ஓ'ட்வையரை படுகொலை செய்ததற்காக பிரிட்டிஷாரின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நீதிமன்ற விசாரணையை பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான கோபங்களையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாக பயன்படுத்தினார் உதம் சிங். நீதிமன்றத்தில் பெயர் கேட்ட போது ``ராம் முகமது சிங் அசாத் " என்று பதில் கூறினார். இந்த பதில் இனம், சாதி, மதத்திற்கு அப்பாற்ப்பட்டு ஒற்றுமையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

இந்து, இஸ்லாம், சீக்கிய மதக்கூறுகளை இணைத்து 'ஆசாத் ' என்ற வார்த்தையையும் தனது பெயரில் சேர்த்து கூறினார். இதன் பொருள் விடுதலை என்பதாகும். உதம் சிங் தனது இந்த போராட்டம் ஒரு சமூகத்திற்கானது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற விரும்பும் அனைத்து இந்திய மக்களுக்கானது என்பதை நிரூபிக்க முயன்றார். ``எனது நூற்றுக்கணக்கான நாட்டு மக்களின் மரணத்திற்கு நான் பழிவாங்கிவிட்டேன்" என நீதிமன்றத்தில் உறுதியாக கூறினார்.
பிரிட்டிஷ் அரசு கொலையாளியாக சித்திரித்து 1940 ஜூலை 7 ஆம் தேதி இவருக்கு தூக்குத் தண்டனையும் வழங்கியது. தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை துணிவுடன் ஏற்றுக்கொண்டார் சிங். 1940 ஜூலை 31 அன்று உதம் சிங் தூக்கிலிடப்பட்டார். நாட்டு மக்களுக்காக இவர் செய்த இந்த தியாகம் பிரிட்டிஷ் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பின் அடையாளமாக திகழ்கிறது.