அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!
பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் இந்த புதிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும், இரண்டு பிரிவுகளை ஒன்றிணைக்கும் போது ஒரே பிரிவில் அஞ்சல் விநியோகிக்கப்படும் நிலவரத்தை மக்களால் எளிதாகக் கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பின்போது, ஒரு அஞ்சலின் பாதுகாப்புக் கருதி பதிவு அஞ்சலை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், விரைவு அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் வழங்கப்பட்டதற்கான ரசீதும், உரியவரிடம் சேர்க்கப்பட்டதற்கான சான்றும், விரைவு அஞ்சலில் கூடுதலாக சேர்க்கப்படும்.
விரைவு அஞ்சலையும், பதிவு அஞ்சலையும் ஒன்றிணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அஞ்சல்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய மையங்களை அஞ்சல் துறை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
நுகர்வோர் பிரதிநிதிகள் புதிய மாற்றத்தையும் நவீனமயமாக்கலையும் வரவேற்றாலும், ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவினங்களையும் பயனாளர்களிடமே வசூலிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இவ்விரு சேவைகளும் வழக்கம் போல செயல்படும். செப்டம்பர் முதல், பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டிய அஞ்சல்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தற்போது, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் அடுத்த நாளே விநியோகிக்கப்படும். தொலைதூர அஞ்சல்கள் அதிகபட்சம் 5 நாள்களுக்குள் சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.