புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!
நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் நாளை (ஆக. 2) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
சண்டைக் காட்சிகள் இருப்பதால், இப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்பில் கூலி
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அனிருத் பேசியதாவது:
இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.
நான் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்க நினைக்கவில்லை. ஆனால், படம் லோகேஷின் பலத்தை நம்பி உருவாகியுள்ளது. அவரது உலகத்தில் தலைவர் ரஜினி சார் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது.
புத்திசாலித்தனமான படம்
நானும் லோகேஷ் கனகராஜ் சேர்ந்தாலே எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். தற்போது ரஜினி சாரும் இருப்பதால் அது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளார்கள்.
இதுவரை 3 பாடல்கள், 5 பேரின் பின்புற காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. டீசர், டிரைலர் இல்லாமலே இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் புத்திசாலித்தனமாக படமாக இருக்கும். இதன் திரைக்கதை மிகவும் அழகாக இருக்கிறது என்றார்.