விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
பேருந்தின் முன்பக்க படிக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்து வந்த அவர்கள், மீனாட்சிபுரம் விளக்கு அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
அப்போது சட்டெனப் பேருந்து நின்றதால் மதன்குமார் கையில் இருந்த 2 1/2 வயது குழந்தையுடன் பேருந்துக்குள் கீழே விழுகிறார். மேலும் அவரது சகோதரியின் கையிலிருந்த ஒரு வயதுக் குழந்தை கையிலிருந்து முன்பக்கப்படி வழியாக சாலையில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் மதன்குமார் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இரு குழந்தைகளும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.