'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வயநாடு: கல்லறையில் டாய்ஸ், தின்பண்டங்கள் - கண்கலங்க வைத்த முதலாமாண்டு நினைவேந்தல் காட்சிகள்
கேரள வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. ஜூலை 30 - ம் தேதியான நேற்று, முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது.

கண்ணீர் மல்க கதறியது காண்போரை கண் கலங்கச் செய்தது!
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்காக புத்துமலை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பொது கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு உறவினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். சர்வமத வழிபாட்டுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லறையாகத் தேடித் தேடி அருகில் அமர்ந்து உறவினர்கள் கண்ணீர் மல்க கதறியது காண்போரை கண் கலங்கச் செய்தது.
உயிர் தப்பியும் நிம்மதி இல்லை
மீளாத் துயரம் குறித்து நம்மிடம் பகிர்ந்த பெண்கள் இருவர், " அன்றைய தினம் இரவு நாங்கள் உயிர் தப்பியது எங்களால் இன்றுவரை நம்ப முடியாத அதிசயமாக இருக்கிறது. ஆனால், உயிர் தப்பியும் நிம்மதி இல்லை. ரத்த சொந்தங்கள், அண்டை வீட்டார் என 30 பேரை முண்டகையில் இழந்து தவிக்கிறோம். நிவேத், தியான், இஷான் ஆகிய மூன்று சிறுவர்களை இழந்ததை இன்றுவரை ஏற்கவே முடியவில்லை. இவர்கள் மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

இவர்களின் பெற்றோர் எப்படியோ உயிர் தப்பிக்க, குழந்தைகள் மூவரும் மண்ணில் புதைந்தனர். சிதைந்த மூன்று பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது. விளையாடித் திரிந்த மூன்று குழந்தைகளையும் இழந்த பெற்றோர் நடைபிணமாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை தேடித் தேடி வாங்கி வந்து கல்லறையின் மீது வைக்கிறார்கள்.
தைரியம் வரவில்லை
அவர்களை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. கல்லறை முழுக்க கண்ணீரும் மரண ஓலமும் தான் இருக்கிறது. நாங்கள் வாழ்ந்த இடத்தைப் போய் பார்க்க இன்னும் தைரியம் வரவில்லை. இப்படியே திரும்புகிறோம். உயிர் தப்பிய ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஓராயிரம் சோகம் புதைந்துக் கிடக்கிறது" என கண்ணீர் வடித்தனர்.

மறுவாழ்வு குறித்து தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், " நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய இந்த பேரழிவில் இருந்து அதிசயமாக உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள் வயநாடு முழுவதும் சிதறடிக்கிடக்கிறார்கள். இவர்களின் மறுவாழ்வுக்காக ஒருங்கிணைந்த டவுன்ஷிப்பை மேப்பாடி மற்றும் கல்பெட்டா பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது " என்றனர்.