புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..
ராமேஸ்வரம் ஏர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பர்கள் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அகஸ்தியன். ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும் மாதேஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டோவிற்கு தரச்சான்றிதழ் பெறுவதற்காக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அங்கு ஆட்டோவிற்கு தர சான்றிதழ் பெற்ற பின்னர் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனமான மினி வேன் எதிரில் வந்துள்ளது. இந்த வாகனத்தை நாலுபனை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தங்கச்சிமடம் நாலுபனை கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே வந்த இந்த வேன் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவும் மினி வேனும் சாலையில் கவிந்து போனது.
இந்த கோர விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் சரவணன் மற்றும் மாதேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயமடைந்த நிலையில் சாலையில் கிடந்த அகஸ்தியன் மற்றும் மணிகண்ணனை அப்பகுதியில் சென்றவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாம்பன் போலீஸார், விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் இருவரின் உடல்களையும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான மாதேஸ்வரனுக்கும் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.