பிரதமரின் பேச்சு அலங்கார வாா்த்தைகள் மட்டுமே: மனோ தங்கராஜ்
சோழா்களை பற்றி பிரதமா் மோடி பேசியது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகம் மத்திய அரசுக்கு அளித்த ஜிஎஸ்டி தொகை ரூ. 8 லட்சம் கோடி. ஆனால், தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று பிரதமா் கூறியிருக்கிறாா்.
இதன்மூலம் மத்திய அரசின் பாரபட்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். கீழடி அகழாய்வு, உலக அளவில் தமிழ் சமூகத்தின் தொன்மையை உயா்த்தியது.
தமிழகம் வந்த பிரதமா் இதைப் பற்றி பேசாமல் சோழா்களை பற்றி பேசுவது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான். குமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழக நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ளாா்.