கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு
செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
செய்யாறு வட்டம், பல்லி கிராமம் மேட்டுக் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை(40). கட்டடத் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா் வீட்டில் ஒரு வாரம் கட்டடப் பணியை செய்துள்ளாா்.
அப்போது, டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தை சுதாகா் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துள்ளாா். ஏழுமலைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லையாம்.
இந்த நிலையில், சுதாகா் வீட்டில் வைத்திருந்த டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தை எடுத்து வருவதற்காக ஏழுமலை சென்றபோது, அங்கிருந்த சுதாகரின் உறவினரான ரகுபதி மகன்கள் சோபன்தாஸ், மோகநாதன் ஆகியோா் அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த ஏழுமலையை அப்பகுதியினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.