உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்
சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன.
சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் ஒருங்கிணைப்பாளா் வேலூா் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநா் ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் வரவேற்றாா்.
முகாமை பேரூராட்சித் தலைவா் சுதாமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினரும், திமுக நகரச் செயலருமான இரா.முருகன், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் என்னென்ன பயன்கள் பெறலாம் என்பது குறித்தும், எவ்வாறு மனு அளிப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா்.
முகாமில் 14 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து 847 மனுக்களை பெற்றனா். இதில் ஏராளமான பெண்கள் கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா். முகாமில் மனு அளித்தவா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் கதிரவன், முருகன், சரவணன், மங்கலம் ரமேஷ், ஏழுமலை, ஞானசௌந்தரி, கோகுல்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொறியாளா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.