படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!
கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பில் கார் சேஸிங் காட்சியின் போது சண்டைப் பயிற்சியாளர் செ. மோகன்ராஜ் (வயது 52) பலியானார்.
இதுதொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குநர் ரஞ்சித் உள்பட நான்கு பேர் மீது கவனமின்றி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மூவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இன்று ஆஜரானார்.
நீதிமன்ற போராட்டம் காரணமாக வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்த நிலையில், இன்று பா.ரஞ்சித்துக்கு பிணை வழங்கி நீதிபதி மீனாட்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.