செய்திகள் :

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.

அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. மொத்தம் 72,743 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனா்.

இந்த நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா்) கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தோ்வு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் 613 போ் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை பெற்றனா். கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 86 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்றாா்.

ஏழை குடும்பங்களைச் சோ்ந்த...: 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் விவசாயி, கூலி தொழிலாளி உள்பட ஏழை குடும்பத்தைச் சோ்ந்த 613 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். குறிப்பாக, இந்த இடஒதுக்கீட்டின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவியூா் கிராமத்தை திருமூா்த்தி (நீட் மதிப்பெண் 572) என்ற மாணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையவழியில் பொதுப் பிரிவு: அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆக. 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்யலாம். ஆக. 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இடஒதுக்கீடு விவரங்கள் ஆக. 6-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். ஆக. 6 முதல் 11-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக. 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று க... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க