செய்திகள் :

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

post image

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்!

ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 காவல் நிலையத்துக்குப் போயிருந்தோம்.

காவல் நிலையம் எப்படி இயங்குது? புகார் தரும் முறைகள் என்ன? இதைப் பற்றியெல்லாம் தெரிஞ்சுக்கிறதுதான் எங்களோட திட்டம்.

அங்கிருந்த காவல் ஆய்வாளர் பிரகாஷ் எங்களை ஸ்டேஷன் வாசலுக்கே வந்து வரவேற்று, சென்னையில் எத்தனைக் காவல் மண்டலங்கள் இருக்கு, அதெல்லாம் எப்படி இயங்குது என்பது குறித்து மிகவும் சுவாரஸ்யமாக எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கான வழிமுறைகளோடு தொடங்கப்பட்டது அந்த உரையாடல்.

Student Reporters Visit At D1 Police Station
Student Reporters Visit At D1 Police Station

காவல் நிலையத்தில் இருக்குற GD (General Diary), CSR (Community Service Register), FIR (First Information Report) எனப் பல்வேறு கோப்புகள் குறித்து எங்களோட பகிர்ந்து கொண்டார்.

எல்லாருக்குமே காவல் நிலையத்தப் பார்த்து ஒரு பயம் இருக்கலாம். அங்க எப்படிப் புகார் கொடுக்கறது? புகார் கொடுக்கப் போனா எப்படி நம்மள நடத்துவாங்கனு நிறைய சந்தேகம் இருக்கலாம்.

அதுக்கெல்லாம் தீர்வு தருகிற மாதிரி இருந்துச்சு இந்தச் சந்திப்பு. “மழைக்குக் கூட போலீஸ் ஸ்டேஷன்ல ஒதுங்க மாட்டோம்"னு சொல்றது ஒன்னும் பெருமை இல்ல.

நமக்கு ஒரு அநியாயம் நடந்துச்சுன்னா நாம காவல் நிலையத்துக்குத் தயங்காம போகணும்.

வணக்கம் சார். உங்களுடைய காவல் நிலையம் எப்படி இயங்குதுன்னு எங்களுக்குச் சொல்றீங்களா?

வணக்கம்! சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக காவல்துறைய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குன்னு நான்கு மண்டலங்களா பிரிச்சிருக்காங்க. அதைப் போலவே காவலர்களிலும் பல்வேறு பிரிவுகள் இருக்கு. இவை எல்லாமே காவல் பணியை செம்மையா செய்யணும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்தக் காவல் நிலையம் வாலாஜா சாலையில் இயங்கி வந்த காவல் நிலையம். இப்ப அங்க பராமரிப்புப் பணி நடந்துட்டு இருக்கறதால அண்ணா சாலைக்குப் பக்கத்துல தற்காலிகமா மாற்றப்பட்டு வந்திருக்கிறோம்.

Student Reporters Visit At D1 Police Station
Student Reporters Visit At D1 Police Station

காவல் நிலையத்தில் இத்தனைக் கோப்புகள் இருக்கிறதே? இதெல்லாம் என்னனு எங்களுக்குச் சொல்றீங்களா?

காவல் நிலையத்தில் என்ன நடக்குது, யார் யார் புகார் கொடுக்க வர்றாங்க, எத்தனை காவலர்கள் பணிக்கு வர்றாங்க என எல்லாச் செய்திகளும் குறிக்கப்படணும். அது அதுக்குன்னு தனித்தனியா கோப்புகள் இருக்கு. இதோ, நீங்க பாக்குறீங்களே! இது தான் GD-னு சொல்லக்கூடிய பொதுநாட் குறிப்பு. இதுல காவல்துறையில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகள், யார் யார் புகார் அளிக்க வராங்க அப்படிங்கற தகவல்களை இதில் குறிப்போம். இந்தக் கோப்பு FIR-னு சொல்லக்கூடிய முதல் தகவல் அறிக்கை பதிவேடு. இதில்தான் குற்றங்கள் பதிவு செய்யப்படுது.

காவல் நிலையத்தில் எப்படிப் புகார் கொடுக்கணும்?

முன்னாடி காவல் நிலையத்துக்கு நேரில் வரணும்னு இருந்துச்சு. இப்ப நீங்க TN Police Online Complaint Portal, SOS காவலன் செயலி வழியாகவும் வீட்டிலிருந்தே புகார் கொடுக்க முடியும். காவல் துறைக்கு நேரில் வந்தும் புகார் அளிக்கலாம். புகார் தர்றவங்க எழுத்துப்பூர்வமாக அவர்களே எழுதியும் கொடுக்கலாம் அல்லது காவல் நிலையத்திலும் அதற்கு அதிகாரிகள் இருக்காங்க. புகார் கொடுக்க வர்றவங்க குற்றம் சாட்டுபவரின் விவரங்களைத் தெரிஞ்ச வரை சொல்லலாம். புகார் தருகிறவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே எழுதுவோம். பிறகு, அவரிடம் கொடுத்துச் சரிபார்த்து அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வோம். பிறகு, அவருக்கு அதை ஒரு நகலாக்கித் தருவோம். அந்தப் புகாருக்கு ஒரு CSR எண்ணையும் அவருக்குக் கொடுப்போம். உடனடி நடவடிக்கை தேவைப்படாத குற்றங்கள் இதில் அடக்கம். மற்றபடி உடனடி நடவடிக்கை தேவைப்படுற குற்றங்களுக்கு உடனடியா FIR பதிவு பண்ணுவோம். FIR பதிவு செய்யறதுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

Student Reporters Visit At D1 Police Station
Student Reporters Visit At D1 Police Station

புகாருக்குப் பிறகு நடைபெறும் செயல்முறைகள் பத்தி சொல்லுங்க...

FIR பதிவு செய்யப்பட்டால் விசாரணை தொடங்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும். தேவையானால் மருத்துவ சான்றுகள், அறிக்கைகள் பெறப்படும். குற்றவாளி கைது செய்யப்படுவார். விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிகை (Charge Sheet) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். குற்றத்தை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லையேல் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையென்று நீதிமன்றத்திற்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு வழக்கின் விசாரணைக்கான கால அளவு என்ன?

காவல்துறையைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு வகையான கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கு. சாதாரணக் குற்றங்களுக்கு 60 நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தரணும். ஒரு சில குற்றங்களுக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் குற்றங்களை ஆதாரங்களுடன் விளக்கி நீதிமன்றத்தில் குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத் தரணும்.

Student Reporters Visit At D1 Police Station
Student Reporters Visit At D1 Police Station

புகார் கொடுக்க வர்றவங்களுக்கு காவல் நிலையம் எந்தளவு உறுதுணையா இருக்கு?

பலர் பரபரப்பா அழுகையோடு தான் உள்ள நுழைவாங்க. நாங்க செய்ற முதல் விஷயம், அவங்களுக்குத் தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தி, முதல்ல அவங்கள உட்கார வைக்கிறதுதான். பிறகு அவங்க சொல்ற எல்லாத்தையும் காது கொடுத்துப் பொறுமையா கேட்போம். அப்போவே, அவங்க பாதி தெளிவாகிடுவாங்க. ஒரு காவல் அதிகாரியோட முக்கியப் பண்பு, மற்றவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாக்குறது தான். ஆங்கிலத்துல அதை ‘Empathy’னு சொல்வாங்க. குறிப்பா எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. புகார் அளிக்க வர்றவங்களை என்னோட குடும்பத்துல ஒருத்தராகத் தான் பார்ப்பேன். அதை எங்க காவல் நிலையத்தில் இருக்குற எல்லாரும் பின்பற்றுவதால் தான் மக்கள் நண்பர்கள் போல எங்களோடு பழகுறாங்க.

மக்கள் குறைகளைப் பதிவு செய்யும்போது என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறீர்கள்?

புகார் கொடுக்க வர்றவங்க எப்படி இருந்தாலும் ஒரு பதட்டம், பயத்தோட, கோபத்தோட வருவாங்க. அதே கோபத்தோட வந்து எங்களைக் கேள்வி கேட்டு ரொம்ப கடிந்து பேசுவாங்க. ஒரு சில பேர் ரொம்ப வருத்தத்துல வருவாங்க. எங்களைப் பொருத்த வரைக்கும் எல்லாருமே ஏதோவொரு விதத்துல பாதிக்கப்பட்டவங்கதான். அந்த பாதிக்கப்பட்டவங்களுக்கு நாங்க முதல்ல ஒரு ஆறுதல் தந்துட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பேசுவோம். அதுக்கு அப்புறம்தான் அவர்களின் குறைகளைக் கேட்டு FIR பதிவு போடுவோம்.

Student Reporters Visit At D1 Police Station
Student Reporters Visit At D1 Police Station

தற்போதைய சூழலில் காவல்துறையினர் மீது மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறதே! அதைப் பற்றி?

இப்ப மட்டும் இல்லை! காலங்காலமாக இருக்கிறதுதான் அது. ஆரம்பத்துல ரொம்ப கவலையாகத் தான் இருந்துச்சு! ஆனா, போகப் போக பழகிடுச்சு. யார் என்ன சொன்னாலும் நாங்க எங்க கடமைகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்போம். ஒருபோதும் எங்கள் காவல் நிலைய கதவுகள் எங்கள் மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களால் மூடப்படுவதில்லை!

தினம் தினம் குற்றங்களையே பார்க்கும் உங்கள் மனநிலை என்ன?

ரொம்ப சரியா கேட்டீங்க! இந்த காவல் பணிக்கு வரும்போது எல்லாருமே மன தைரியத்தோடுதான் வருவோம். ஆனால் அதிக குற்றங்களைப் பார்க்கும்போது எங்களுடைய மனநிலையும் மாறும். எங்களுக்கும் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பல சிக்கல்கள் இருக்கு. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் எங்கள் பணியை மேற்கொள்வது எங்களுடைய கடமை. நாங்கள் அதற்குப் பழகி விட்டோம்.

D1 Station Inspector - Prakash
D1 Station Inspector - Prakash

24/7 வேலையைப் பற்றிய சிந்தனையோடவே இருக்கிறீர்களே! எப்போதாவது சலித்ததுண்டா?

இல்லை! ஓய்வே இல்லை என்று தெரிந்து தானே இந்தப் பணியைத் தேர்வு செய்தோம். எனினும், தமிழக அரசு இப்போது காவல்துறையினர் நிலையில் இருந்து யோசித்து, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்காங்க! அது ரொம்ப சந்தோஷம். எல்லாக் காவலர்களும் வாரத்துல ஒரு நாள் விடுப்பு எடுக்கறதுக்கான வாய்ப்பு இப்ப ஏற்படுத்தப்பட்டிருக்கு. ஆண்டுக்கு ஒரு முறை, குடும்பத்தோடு இணைந்து சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் நடைமுறையில் இருக்கு.

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ளகிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்... மேலும் பார்க்க

பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்த... மேலும் பார்க்க

"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை

சென்னை IIT- நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பேசியிருக்கும் பாஜக அண்ணாமலை, "கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" - முதல்வர் கோரிக்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (ஆகஸ்ட் 2) இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை ... மேலும் பார்க்க

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க