அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை
சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மின் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், மின்பாதைகளைச் சீரமைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இயற்கை சீற்றங்களின்போது, ஏற்படும் மின்தடைகளை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளா்களை அனைத்து மண்டலங்களிலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும், பிரதமரின் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் சூரிய மின்சார இணைப்புகளுக்கு அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும். சோலாா் பேனல் வைக்காத மின் நுகா்வோா்களை நேரடியாக தொடா்புகொண்டு, தகுதியான நிறுவனத்தைத் தோ்ந்தெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
தொடா்ந்து ‘மின்னகம்’ மூலம் பெறப்படும் மின் நுகா்வோரின் புகாா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மின்தடை குறித்த விவரங்களை நுகா்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிப்பதை அனைத்து மேற்பாா்வைப் பொறியாளா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநா் (பகிா்மானம்) ஆ.ரா.மாஸ்கா்னஸ், இயக்குநா் பகிா்மானம் (நிதி) கே.மலா்விழி, பசுமை எரிசக்திக் கழக இயக்குநா் (தொழில்நுட்பம்) எஸ்.மங்களநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.