சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?
தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலருக்கும் தெரியாது. அப்படி சுற்றுலா அல்லது மசாஜ் பார்லர்கள் இல்லாமல் தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரம் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
சுற்றுலாவின் பங்களிப்பு
2024 ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்து 3.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, சுமார் 48 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.

தாய்லாந்து உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடு
சுற்றுலா தவிர ஜாஸ்மின் என்ற அரிசி உலகெங்கும் உள்ள வீடுகளுக்கும் உணவகங்களுக்கும் செல்கிறது. நாட்டின் 30 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ரப்பர், மக்காச்சோளம், இறால், கணவாய், மற்றும் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகளையும் தாய்லாந்து அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இவை கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி ஏற்றுமதி சந்தையை செழிக்கச் செய்கின்றன.
தாய்லாந்து ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது. டொயோட்டா, ஹோண்டா, ஃபோர்டு போன்ற ஜப்பான், அமெரிக்க, ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்கு பெரிய உற்பத்தி ஆலைகளை இயக்குகின்றன.
தாய்லாந்து, வாகனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. மின்னணு பொருட்கள், கணினி வன்பொருள், மற்றும் ஜவுளி ஆகியவையும் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாய்லாந்தின் பொருளாதாரத்தில் 60 சதவீதம் ஏற்றுமதியிலிருந்து வருகிறது. விவசாயப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் என சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நாட்டின் முக்கிய பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, இரவு வாழ்க்கை என்ற பிம்பத்தைத் தாண்டி, தாய்லாந்தின் பொருளாதாரம் விவசாயம், தொழில்துறை, மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை சார்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.