செய்திகள் :

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பாங்காங் ஏரி. சீனாவில் இதற்குப் பெயர் ஆங்லா ரென்போ டிஸோ. அதன் அர்த்தம் நீளமான கழுத்துடைய நாரை. ஏரி கண்ணில் தெரியத் தொடங்கிய கணம் முதல் நாங்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவேயில்லை. அதன் பிரம்மாண்டம், அதற்குப் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்கள், ஏரியின் எதிர்புறம் தெரிந்த பனி மூடிய சிகரங்கள் என எத்தனை விவரித்தலும், அதற்கு நியாயம் செய்ய முடியாது என்றே தோன்றியது.


காலை வேளைகளில் ஏரி வெளிர் நீல நிறத்தில் தோன்றும். பொன்னிற மலைகளின் பிரதிபலிப்பும் அதற்குக் கொஞ்சம் வண்ணம் சேர்க்கும். அடுத்த சில மணி நேரங்களில், சூரியன் உச்சியை அடையும்போது, ஏரியின் நீலம் அடர்த்தியாகும். சில நேரங்களில் அது மரகதப் பச்சையாகவும், ஊதா வண்ணத்தின் இழையோடும் காட்சியளிக்கும்.

மாலையில் கரைகளில் மட்டும் கருநீல வண்ணம் மேம்பட்டிருக்கும். சூரிய ஒளியின் கோணம், அதன் தன்மை, ஏரியைச் சுற்றிய மேகக்கூட்டம் இதனைப் பொறுத்து, அதன் நிற வெளிப்பாடுகள் மாறும். மொத்தத்தில் இயற்கை சூரியனின் ஒளியைத் தூரிகையாகவும், ஏரியைக் களமாகவும் கொண்டு பொழுதுக்கு ஒரு வண்ணமெனத் தீட்டி விளையாடிக்கொண்டிருந்தது.

எங்களது தங்கும் விடுதி சாலையிலிருந்து கீழே இறங்கி ஏரிக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. கூழாங்கற்களாலானது அந்தப் பாதை. தடதடவென வரிசையாக பைக்குகளை அப்பாதையில் இறக்கினோம். ஏரிக்கரையின் அருகில் சென்று பைக்குகளை நிறுத்திவிட்டு நடந்தோம். ஹெல்மெட்டுகளை நாங்கள் கழற்றுவதற்கு முன்னரே சஷாங்க் வந்துவிட்டார். தலைக்குத் தொப்பி அல்லது குல்லாவைப் போட்டுக்கொண்டுதான் கரைக்கு வரவேண்டும் எனச் சொல்லிச் சென்றார்.

மாலை என்பதால், அங்கு ஓரளவு நல்ல கூட்டம் இருந்தது. அப்பகுதியில் எப்படியும் ஐம்பது தங்கும் விடுதிகளாவது இருக்கும். அங்கே தங்கியிருந்தவர்கள் ஏரிக்கரையில்தான் நின்றிருந்தனர். ஏரிக்கு அருகில் செல்லச் செல்லக் காற்றில் இருந்த குளிர்ச்சியை உணர முடிந்தது. ஓரமாக நின்று நீரை கை, கால்களால் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனரே தவிர, யாரும் நீரில் இறங்க முற்படவில்லை.


அங்கிருந்த வீடுகள் மரம், தகரத்தால் செய்யப்பட்டிருந்தன. அந்த இடத்தின் காற்றுக்கும், இரவு குளிருக்கும் கூடாரங்கள் தாக்குப்பிடிக்காது. அதோடு, இரவு ஒன்பது மணிக்கு மேல் அங்கே மின்சாரமோ, தண்ணீரோ வராது. தேவையான நீரை முன்பே சேமித்து வைத்துவிடச் சொல்லியிருந்தனர். எட்டு மணிக்குள் இரவு உணவையும் முடித்துக்கொள்ளும்படியும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அடுத்த சில அடிகளில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியாதவாறு முற்றிலும் இருள் சூழ்ந்த பிறகுதான் ஏரிக்கரையிலிருந்து கிளம்பினோம். அருகிலிருந்த விடுதிகளில் அப்போதே கேம்ப் பையர் போடத் தொடங்கியிருந்தனர். ஆங்காங்கே பாடல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன.

ஜிஸ்பாவில் தங்கியிருந்ததை போலத் தனிக்கூடாரமாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இங்குச் சுற்றிலும் அடுக்கடுக்காகத் தங்குமிடங்கள் இருந்தன. அந்த வகையில் சிறு ஏமாற்றம்தான் என்றாலும், அது எந்த வகையிலும் எங்கள் அனுபவத்தைப் பாதிக்கவில்லை.

இரவு உணவுக்குப் பிறகு எங்கள் அறைக்கு வெளியே நின்று அணியினருடன் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது ஏரிக்குப் போகலாம் எனச் சிலரும், வேண்டாம் என மீதமிருப்போரும் சொல்ல,


அருணிடம் ‘நீ ஏரியை நீந்திக் கடந்தால் சீனாவுக்குச் சென்றுவிடலாம். நாங்கள் உன்னை அங்கு வந்து பார்க்கிறோம். என்று ஆயுஷ் சொன்னதோடு, ‘வா இப்போதே உன்னை ஏரியில் தள்ளிவிடுகிறேன்’ என அருணை பிடித்து இழுத்தார். 


அவர்கள் இருவரும் கீழே உருண்டு புரளாத குறைதான். அப்போது எங்களிடம் வந்த பார்த், எதிர்புறம் இருந்த அறையைக் காண்பித்து, அங்கேதான் இன்றைய இரவு சந்திப்பு அது முடிந்ததும் சிறு பார்ட்டி இருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.


அவர் பார்ட்டி என்றதும் எங்களுக்குப் புரிந்துவிட்டது என்றாலும், நாளைய பயணத்தை பற்றி விவரங்களைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அங்கே சென்றோம். அறை முழுவதும் நிரம்பியிருந்த புகை, நாங்கள் கதவைத் திறந்ததும் முந்திக்கொண்டு வந்து எங்கள் மூச்சையடைத்தது. ஒரேயொரு குண்டு பல்பு வெளிச்சத்தில், உள்ளே மது பாட்டில்களும் தென்பட்டன. அதற்குமேல் உள்ளே போகலாமா வேண்டாமா என்று நாங்கள் தயங்கி நிற்க, பார்த் வந்து அழைத்துச் சென்றார். சில நிமிடங்கள் கூட அங்கே என்னால் இருக்கமுடியவில்லை.

‘நான் அறைக்குச் செல்கிறேன், நீங்கள் வேண்டுமானால் கொஞ்சம் நேரம் அங்கே இருந்துவிட்டு வாருங்கள்’ என்றேன். அதை ஏற்காமல், என்னுடன் வருவதாகச் சொன்னார் நவீன்.


எங்கள் உரையாடலைப் பார்த்துவிட்ட பார்த், ஓடிவந்து, என்ன ஆனது என்று விசாரித்து விட்டு, மீண்டும் எங்களை உள்ளே வரச் சொன்னார். இது நாங்கள் விரும்பக்கூடிய பார்டியல்ல என்பதை அவருக்குப் புரியவைக்கப் பார்த்தோம். அவர் கேட்பதாகத் தெரியவில்லை.

‘பரவாயில்லை, கூல் டிரிங்க்சுடன் எங்களுடன் சிறிது நேரம் இருங்கள். லெட்ஸ் செலிப்ரேட்’ எனச் சொல்ல, இந்தப் பாட்டில்களை எங்கிருந்து ஏற்பாடு செய்தீர்கள் எனக் கேட்டோம். லே நகரிலிருந்து அவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டு வந்த கதையை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த சஷாங்க், அந்த அறையையும், நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்ததும் சூழலைப் புரிந்துகொண்டார். பயணத்திட்டத்தை பற்றியெலாம் காலையில் பேசிக்கொள்ளலாம், நீங்கள் இருவரும் உங்கள் அறைக்குச்செல்லுங்கள் என்றார். இல்லை, அவர்கள் எங்களுடன் இருக்கட்டும் என பார்த் சொல்ல,


‘வேண்டாம், அவர்கள் அறைக்குச் செல்லட்டும், நான் உங்களுடன் பார்ட்டிக்கு வருகிறேன் என்றார்’ அவர்களிடம் இருந்து தப்பித்து, அங்கிருந்த புல்வெளியில் சிறிது நேரம் அமர்த்திருந்துவிட்டு அறைக்குச் சென்றோம்.

Pangong lake view, Ladakh

காலை ஐந்து-ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, யாருமில்லாத சமயத்தில் எரிக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அதன்படி எழுந்து தயாராகி வெளியே வந்தால், எங்களுக்கு முன்னே ப்ரீத்தியும், அவளது நண்பரும் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பைக்கை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு நாங்களும் வெளியே வந்தோம். வண்டியை எடுப்பதா, நடந்து கீழே செல்வதா என்ற சிறு விவாதத்திற்குப் பிறகு, பைக்கில் சாவியைத் திருகி, எஞ்சினை இயக்கினார் நவீன்.

அவர்கள் அங்கே சென்று இறங்கிய சிறிது நேரத்தில் நாங்களும் சென்று சேர்ந்தோம். அதிகாலை ஏரியின் அழகைத் தனியாக ரசிக்க வேண்டும் என்பதுதான் இருவரின் எண்ணமும். அதைப் புரிந்துகொண்டவர்களாக, அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து வெகுதொலைவுக்கு நாங்கள் சென்றோம். எங்கள் பக்கம் அவர்களும், அவர்கள் பக்கம் நாங்களும் செல்லாமல், அன்றைய காலை போட்டோஷூட் நடந்தது.

கிளம்புவதற்கு முன்பு வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்பவேண்டியிருந்தது. அந்தப் பகுதியில் கடைகள், எரிபொருள் நிலையங்கள் என எதுவுமே இல்லை. அடுத்து சொல்லப்போகும் இடத்திலும் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனால் டெம்போ டிராவலரிலேயே எரிபொருள் கேன்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. பீர் பாட்டில்கள் முதல் எரிபொருள் கேன்கள் வரை அனைத்தையும் பக்குவமாகத் திட்டமிட்டுக் கொண்டுவந்திருந்தனர்.


மண்ணெண்ணெய் ஊற்றும் குழாயில் பைக்குகளில் சஷாங்க் பெட்ரோலை நிரப்ப, அதை நாங்கள் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிடப்போவதாக செல்ல மிரட்டல்கள் விடுத்தோம். ஆஃப் ரோடிங்கில் பாதிக்கப்பட்டிருந்த பைக்குகளை பழுது பார்த்துவிட்டு, நாங்கள் கிளம்புவதற்கே நேரம் எடுத்தது.

அன்றைய பயணத்தில் நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு, பக்கவாட்டில் பாங்காங் ஏரி தெரிந்தபடியே இருந்தது. ஒவ்வொரு நிமிடப் பயணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏரி, எங்கள் பார்வைகளிலிருந்து மறைந்துகொண்டிருந்தது. இயன்றவரை ஆந்தையைப் போலக் கழுத்தைத் திருப்பி அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பின்பும் வண்டியின் கண்ணாடியில் சில நொடிகள். ஒவ்வோர் இடத்தை விட்டு அகலும் போதும், தவறாமல் மனத்தில் தோன்றும் அதே கேள்வி, அப்போதும் வந்தது. மீண்டும் எப்போது இங்கு வரப்போகிறோம்.


இனிமேல் வாழ்வில் தார்ச் சாலையைப் பார்த்தலே, இறங்கி அதில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அன்று ஆஃப் ரோடிங் இருந்தது. ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடிய கற்களாலான ஒற்றையடிப் பாதை. ஒரு புறம் மலைப் பாறைகள், மறுபுறம் பள்ளத்தாக்கு.

படுகுழியைத் தவிர்ப்பதற்காக பைக்குகளை பாறைகளின் பக்கமே கவனமாக பைக்குகளை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தோம். அப்படி ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது அளவில் சற்றே பெரியதாக இருந்த ஒரு கல்லைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் எங்கள் வண்டியின் சமநிலை தடுமாறியது. அதை என் கண்கள் பார்த்து, தகவலை அனுப்புவதற்குள், மூளை பதறி நாங்கள் விழுந்துவிட்டோம் என என்னை நம்பச் செய்தது.

அந்த ஒற்றையடி கற்பாதையில் கன ரக வாகனங்கள் சென்றதில் இணையான மண் தடங்கள் உருவாகியிருந்தன. இரு பாதைகளுக்கு நடுவிலும், வெளிப்புறத்திலும் கற்குவியல்கள். அந்த மண் தடத்திலிருந்து விலகி கற்பாதைக்கு வண்டி தடுமாறியது. பயத்தில் நவீன் பிரேக்கை போட்டிருந்தால், நிச்சயம் நாங்கள் விழுந்திருப்போம்.

ஆனால் அவர் அந்த மில்லி செகண்டில் வண்டி விழாமல் தவிர்க ஒரு மில்லியன் சத்தியகூறுகளையவது யோசித்திருக்கவேண்டும். வண்டி சாயாமல் இருக்க பைக்கின் கைப்பிடிகளை இறுக்கிப் பிடித்து அதைச் சமநிலைக்குக் கொண்டுவந்தபோது, எங்கள் வண்டி பள்ளத்தாக்கிற்குப் பக்கத்தில் இருந்தது. அதிலிருந்து தப்பிக்கச் சாலையின் மத்தியில் வருவதற்கு மீண்டுமொரு திருப்பு. இம்முறையும் தடுமாற்றம் இருந்தது ஆனால் வண்டி கவிழவில்லை.


ஏற்பட்ட தள்ளாட்டத் தடுமாற்றங்களை சமாளித்து மீண்டும் வேகமெடுப்பதற்கு எங்களுக்கு ஒரு நொடி அவகாசம் கூட இல்லை. எங்கள் பின்னால் பைக்குகள் வந்துகொண்டிருந்தன. அவர்களும் ஏறக்குறைய அதே வேகத்தில்தான் வந்துகொண்டிருந்தனர். பின்னர் ஓர் உரையாடலின்போது, நீங்கள் விழுந்துவிட்டீர்கள் என்றே நினைத்தேன் என்று சொன்னர் எங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த விவேக்.


 (தொடரும்) 


- ராஜ்ஸ்ரீ செல்வராஜ்


(rajshriselvaraj02@gmail.com) 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலரு... மேலும் பார்க்க

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைப... மேலும் பார்க்க

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க

வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்?

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்... மேலும் பார்க்க

சதுரகிரி: `கொள்ளை அழகு!' - மிஸ் பண்ணவேகூடாத வழித்தடம் | Photo Album

இயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி ... மேலும் பார்க்க

வானத்திலிருந்து ஜல்லிக்கற்கள் அதிக விசையில் எங்கள்மேல் விழுவதைப் போலிருந்தது! - திசையெல்லாம் பனி- 8

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க