கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...
ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பணப்பரிமாற்றம் தோல்வியடைதல் போன்றக் காரணங்களால், புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முக்கியமாக, அடிக்கடி யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், வங்கிக் கணக்கில் இருக்கும் கையிருப்பை காண்பதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்
பண இருப்பு பற்றிய தகவல்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒவ்வொருப் பணப்பரிமாற்றத்துக்குப் பிறகும், ஒரு வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை வங்கிகள் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கையிருப்பை அறிய கட்டுப்பாடு
யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், வங்கிக் கணக்கில் இருக்கும் கையிருப்பை, ஒருவர் செயலி மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறைதான் பார்க்க முடியும்.
அதுபோல, செல்போன் செயலியில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை ஒருவர் 25 முறைதான் பார்க்க முடியும்.
ஒரே நேரத்தில் எண்ணற்றோர், செயலிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சர்வர் பாதிப்பைத் தடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
பரிமாற்ற நிலை
ஒரு பணப்பரிமாற்ற நிலையை ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைதான் அறிய முடியும். அதுவும் 90 வினாடிகளுக்குப் பிறகே மற்றொரு முறை முயற்சிக்க முடியும்.
அதுபோல, தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அதாவது, இஎம்ஐ செலுத்துவது, கடன் தவணை பிடித்தம் போன்றவை, நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மாற்றி ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் அவ்வப்போது அதனை பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
இந்த புதிய மாற்றங்கள் மூலம், பணப்பரிமாற்றங்கள் வேகமாக நடைபெறும், பயன்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பணப்பரிமாற்றம் செய்வது மற்றும் தொகையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஒருவர் அதிகபட்சமாக ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.1 லட்சம் வரைதான் செலுத்த முடியும், கல்வி அல்லது மருத்துவ சிகிச்சைக்காக என்றால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.