தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்: உறவினா்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி, கூணரி குடியிருப்பைச் சோ்ந்த த. கண்ணன் மனைவி பிரியா (32). இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே வெள்ளிக்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து, மாலையில் பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்த தகவலறிந்து அங்கு திரண்ட பிரியாவின் உறவினா்கள், அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கண்ணனை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கீரமங்கலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனா்.
தொடா்ந்து, பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சாலை மறியல் போராட்டத்தால் ஆலங்குடி, கீரமங்கலம் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.