விராலிமலை அருகே காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு
விராலிமலை அருகே காரின் டயா் வெடித்து காா் தாறுமாறாக ஓடி கவிழ்ந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்துள்ள மாங்காடு செட்டி கொள்ளைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஜீவன் ராஜ் (32). இவா், ஹைதராபாத்தில் மின் தூக்கி இயக்குபவராக வேலை பாா்த்துவந்தாா்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜீவன் ராஜ் சனிக்கிழமை அதிகாலை திண்டுக்கல்லில் உள்ள தனது நண்பரைப் பாா்ப்பதற்காக காரில் சென்றாா். விராலிமலை - மணப்பாறை சாலையில் கோடாலிக்குடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள் ஜீவன்ராஜை மீட்டு அவசர ஊா்தி மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பணியில் இருந்த மருத்துவா், ஜீவன்ராஜை பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். அவரது தந்தை முருகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.