புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக பிகார் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 6.5 லட்சம் பேர் சேர்க்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலும் மேலும் வினோதமாகி வருகிறது.
பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது. இது சட்டவிரோதமானதும்கூட.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்' என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தாங்கள் விரும்பும் ஆட்சியை தேர்வு செய்யும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் அவர்கள் தலையிடுவது போன்றதாகும்.
புலம்பெயர் தொழிலாளர்கள், வழக்கமாக செய்ததுபோலவே, பிகார் அல்லது அவர்களின் சொந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏன் வாக்களிக்கக் கூடாது?
சத் பூஜை விழாவின்போது புலம்பெயர் தொழிலாளர்கள், பிகாருக்குச் செல்கிறார்கள்தானே?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிகாரில் அல்லது அவரின் சொந்த மாநிலத்தில் வீடு உள்ளது. அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
பிகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து அங்கு வாழ்ந்துவரும் சூழ்நிலையில் அவர்களை தமிழ்நாட்டில் "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று எவ்வாறு கருத முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலினையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
The SIR exercise is getting curiouser and curiouser
— P. Chidambaram (@PChidambaram_IN) August 3, 2025
While 65 lakh voters are in danger of being disenfranchised in Bihar, reports of "adding" 6.5 lakh persons as voters in Tamil Nadu is alarming and patently illegal
Calling them "permanently migrated" is an insult to the…
Congress Leader P chidambaram says that ECI is abusing its powers and trying to change the electoral character and patterns of States
இதையும் படிக்க | நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை