பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன்...
மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, ''சத்ரபதி சிவாஜியின் தலைநகரமான ராய்கட்டில் டான்ஸ் பார்கள் நடக்கக்கூடாது. ராய்கட் மாவட்டத்தில் அதிகப்படியான டான்ஸ் பார்கள் செயல்படுகின்றன. அவை யாருக்குச் சொந்தம். அவை மராத்தியர்களுக்கு மட்டுமா சொந்தம்? உங்களை டான்ஸ் பார்களுக்கு அடிமையாக்கிவிடுவார்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராஜ் தாக்கரேயின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவரது கட்சித் தொண்டர்கள் 10க்கும் மேற்பட்டோர் பன்வெலில் உள்ள நைட் ரைடர் பாருக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர்.
மதுபாட்டில், இருக்கைகள், கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அவர்கள் அடித்துச் சேதப்படுத்தினர். அவர்கள் கம்புகளுடன் சென்று அடித்து உடைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், ''கட்சித் தொண்டர்களின் நடவடிக்கை 'அடையாள போராட்டம்' ஆகும். டான்ஸ் பார்கள் சட்டவிரோதமானவை. அதனால்தான் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
இது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ள போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே ராஜ் தாக்கரே கட்சியினர் மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். மராத்தி பேசாத வியாபாரிகளை ராஜ் தாக்கரே கட்சியினர் மும்பையில் ஆங்காங்கே அடித்து உதைத்த சம்பவங்கள் நடந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இப்போது ராஜ் தாகக்ரே கட்சியுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொண்டர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பன்வெல் பகுதியில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.