இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் ந...
பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி
கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அமைச்சர்களை இங்கு அழைத்து வருவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

தேசிய விருது படைப்புத்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர். அவர்களும் தேசிய விருது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் சித்தாந்தங்களை அதிமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். அப்படியென்றால் திமுக - பாஜக கூட்டணியிலிருந்தபோது, பாஜக கருத்தியலுடன் முழுமையாக ஒத்துழைத்து கூட்டணி வைத்திருந்தார்களா எனத் திமுகவிடம் திருமாவளவன் கேட்டுச் சொல்ல வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் வருவார்கள் என்பதை தேசிய தலைமை அறிவிக்கும். எங்கள் கூட்டணிக்கும் கட்சிகள் வருவார்கள். வரும்போது ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து வருவார்கள். எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுகவுக்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைப்பது மட்டுமே இலக்கு.
தமிழகத்தில் யாரெல்லாம் வாக்காளர்கள் என்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வைத்துள்ளது. மும்பை, டெல்லியில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள். வாக்குரிமை பெறக் குறிப்பிட்ட ஆண்டு அந்தப் பகுதியில் குடியிருக்க வேண்டும். பிற மொழி பேசுபவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் எங்கேயும் இல்லை.

இதில் விதிகள் மீறப்பட்டிருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். வடமாநில தொழிலாளர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் வெறுப்பு கருத்துகளைப் பேசுகிற, அரசியல் பிரிவினைவாதம் பேசும் சில தலைவர்கள் இதைப் பேசுகின்றனர்.” என்றார்.