தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி
கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட மலை மாடுகள் அழைத்து வரப்பட்டன. மாடுகளை மேய்த்துக் கொண்டு சீமான் செல்லும்போது போராட்டத்தை நிறுத்தச் சொல்லி வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாடுகள் வனப்பகுதிக்குள் நுழைவதற்குத் தடையாக பேரிகார்டுகளையும் வைத்து வழியை மறைத்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் தடையை அகற்றச் சொல்லி பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரிகார்டுகளை அகற்றிவிட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?.
தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன. புதுகோட்டை, சிவகங்கை பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போகிறது மாடு மேய்க்கும் கீதாரிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலைகளில் ஆடு மாடுகள் மேய்வதால் மலையில் தீ பற்றினாலும் அது பரவாமல் தடுக்கபடும். ஆடு மாடுகளின் சாணம் மண்ணிற்கு உரமாகும். காடு செழிப்படையும். மலைகளில் ஆடு மாடு மேய்ப்பதைத் தடுத்தால் திரும்பவும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்" என்றார்.