குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான குற்றாலம் சாரல் திருவிழா 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குற்றால சாரல் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இதன் ஒரு பகுதியாக ஐந்தருவியில் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலை சார்பாக மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழங்கள். காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனைப் பொருட்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் வாசனை பொருட்களாலான வண்ணத்துப்பூச்சி மக்களின் மனதை கவர்ந்தது.
இந்த வண்ணத்துப்பூச்சி 19 வகையான வாசனை பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இங்கு வந்த பார்வையாளர்களும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இதனைக் கண்டு களித்து ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்த வாசனைப் பொருட்களாலான வண்ணத்துப்பூச்சியானது சுமார் 8 அடி உயரமும் ஏழரை அடி அகலமும் கொண்டது.

இந்த வண்ணத்துப்பூச்சியை சுமார் நான்கு பேர் கொண்ட குழுவினரால் ஒரு வார காலமாக வடிவமைத்துள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்ட வாசனைப் பொருட்கள் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, சோம்பு, சீரகம், கசகசா, ஸ்டார் பூ, மிளகாய் விதை, கருஞ்சீரகம், மராட்டி மொக்கு, வெந்தயம், காய்ந்த கொத்தமல்லி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, வெள்ளை எள், மஞ்சள், சுக்கு, திப்பிலி, மிளகு உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி உள்ளனர். இதனுடன் காய்கறியால் செய்யப்பட்ட குரங்கு, பூவினால் செய்யப்பட்ட ஐந்தருவி, பட்டுப்பூச்சி போன்றவை மூன்று முதல் நான்கு அடி உயரம் உள்ள இரும்புத் தூணிலே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மலர் கண்காட்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோட்டக்கலைத்துறை செய்திருந்தது.