உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ்கர் சிங் விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரின் சிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பர்வத்தின் உச்சியில் மான்சா தேவி கோயில் அமைந்திருக்கிறது. சுமார் 1.5 கிமீ மலை மீது ஏற மலைப்பாதை, படிகட்டுகள், ரோப்வே வழியாகக் கோயிலை அடையமுடியும். இந்த நிலையில், இன்று காலை மான்சா தேவி கோயிலுக்கு படிகட்டு வழியே சென்ற பக்தர்கள் மத்தியில், காலை 9 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 55 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
हरिद्वार के मनसा देवी मंदिर में दर्शन के दौरान मची भगदड़ में 6 श्रद्धालुओं की दर्दनाक मौत की सूचना है। श्रद्धालुओं की भारी भीड़ के कारण हालात बिगड़े।प्रशासनिक तैयारियाँ हुईं फ्लॉप। #haridwar#mansadevi#Uttarakhand#gangajipic.twitter.com/BZQnuSQGm1
— SANJAY TRIPATHI (@sanjayjourno) July 27, 2025
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புப் பணியை தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே மன்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்டத்தில் இருந்த சிலர் மீது மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளம்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் உண்டானதாகத் தெரிகிறது." என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ``ஹரித்துவாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த துயரச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன். எஸ்.டி.ஆர்.எஃப், உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் நிர்வாகத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். அனைத்து பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் மாதா மான்சாவிடம் பிரார்த்தனை செய்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.