நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!
நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழுக்கு மரம் ஏறும் போட்டியினை நேற்றிரவு நடத்தியிருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வழுக்கு மரம் ஏற முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்கிற இளைஞர் தொடர்ந்து முயற்சி செய்து வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார்.

சாகச போட்டியில் குருமூர்த்தி வெற்றியடைந்ததைக் கண்ட மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அடுத்த சில வினாடிகளில் 60 அடி உயர வழுக்கு மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார் குருமூர்த்தி. படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோயில் திருவிழாவில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி விபரீதத்தில் முடிந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்து இளைஞர் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.