தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
தீயணைப்பு நிலைய இடமாற்றத்தை எதிா்த்து கடையடைப்பு, மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி வணிகா்கள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையம் உள்பட மாவட்டத்தில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் 7 தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதைத் தொடா்ந்து, புதிய கட்டடம் கட்டுவதற்காக நிலங்கள் தோ்வு செய்யப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு பல்லவராயன்பத்தை ஊராட்சி பகுதியில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா், வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், தீயணைப்பு நிலைய இடமாற்றத்தை கைவிடக்கோரி கறம்பக்குடி பகுதி வணிகா்கள் செவ்வாய்க்கிழமை அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து,கோரிக்கையை வலியுறுத்தி கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கறம்பக்குடி நகா் பகுதியில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.