இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க உத்தரவு!
Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா?
Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா.... ஆங்கில மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தாலும், உணவு அலர்ஜி பற்றி விசாரிப்பது ஏன்... சிகிச்சை முடியும்வரை அசைவம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி

வீட்டில் வளர்க்கும் நாய், தெருநாய், தெரிந்தவர் வீட்டு நாய் என எதுவாக இருந்தாலும், நாய்க்கடியை அலட்சியப்படுத்தக்கூடாது. முதலில் அலட்சியப்படுத்திவிட்டு, பிறகு வருத்தப்படுவதற்கு, ஆரம்பத்திலேயே அலெர்ட்டாக இருப்பது பாதுகாப்பானது.
நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, ரேபிஸ் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களில் நாய்க்கடி சம்பவங்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நிறைய கேள்விப்படுகிறோம்.
நாய்க்கடியில் பல நிலைகள் உண்டு. லேசாகப் பிராண்டி இருக்கலாம். பற்கள் உள்ளே பதியாமல் லேசான கடியாக இருக்கலாம் அல்லது ஆழமான கடியாக இருக்கலாம். சிலருக்கு தீவிரமாகக் கடித்துக் குதறியிருக்கலாம். எனவே, எப்படி இருந்தாலும், அந்த நாய்க்கு ஏதேனும் இன்ஃபெக்ஷன் இருக்கும்பட்சத்தில், கடி வாங்கியவர்களுக்கும் அதனால் பிரச்னை வரும்.
கடிபட்ட இடத்தில் வலி, வீக்கம், காய்ச்சல், குளிர் உள்ளிட்ட அறிகுறிகள் வரலாம். சரியான நேரத்தில் தடுப்பூசி போடாவிட்டால், அது வேறு விதமான தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
நாயோ, பூனையோ, பறவையோ எதுவானாலும் கடிபட்டதும் மருத்துவரை அணுகும் முன், கடிபட்ட இடத்தை குழாய் தண்ணீரில் சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும். லேசான கீறலாக இருந்தால், சுத்தமான மஞ்சள்தூளை வெந்நீரில் குழைத்து அந்த இடத்தில் போட்டுக்கொண்டு மருத்துவரை அணுகலாம். கடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் நிறைய வருகிறது என்றால், சுத்தமான துணியால் அழுத்திப் பிடித்தபடி மருத்துவரிடம் விரைய வேண்டும்.
பொதுவாக, இதுபோன்ற கடிகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. ஆனால், மறைமுக தொடர்பு இருக்கலாம். நாய்க்கடி எப்போது சரியாகும் என்று தெரியாது. கடிபட்ட பிறகு அலர்ஜி வந்ததா, வருமா என்றும் தெரியாது. காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அனஃபைலாக்சிஸ் (Anaphylaxis) என ஒரு ரியாக்ஷன் நடக்கும்.
கரீனா கபூரின் சகோதரி கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர், விளையாடிக் கொண்டிருந்தபோது, புல்வெளியில் இருந்த வண்டு கொட்டியதால் அவர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்த செய்தியை சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் அனஃபைலாக்டிக் ரியாக்ஷன் (Anaphylactic reaction).
அதாவது உடலில் அலர்ஜி ஏற்பட்டு, சில நொடிகளில் ஒட்டுமொத்த உடலும் ஒரு ஷாக்குக்கு உள்ளாகி, மூச்சுவிட முடியாமல் போய், கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரே பறிபோகும் அளவுக்கு தீவிரநிலைக்கு கொண்டு போகலாம்.
அரிதான நிகழ்வுதான் என்றாலும் இது குறித்த விழிப்பு உணர்வு அனைவருக்கும் அவசியம். வீட்டு நாய்தான் கடித்திருந்தது என்றாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்கெனவே ஏதோ அலர்ஜி இருக்கும்பட்சத்தில், நாய்க்கடியும் அலர்ஜியும் சேர்ந்து அவருக்கு ஏதேனும் பிரச்னை வருமா என்பது மருத்துவருக்குத் தெரியாது. அதனால்தான் கன்சல்ட்டிங் போகும்போதே அந்த நபருக்கு ஏதேனும் அலர்ஜி இருக்கிறதா என்று விசாரிப்பார். நாய்க்கடி பட்ட பிறகு சிலருக்கு ஒருவித அலர்ஜி வரலாம். கடிபட்ட பிறகு அசைவ உணவுகள் எடுப்பதால், அந்த அலர்ஜி வெளியே தெரியவரலாம்.
சிலருக்கு அசைவ உணவுகளில் கோழி, ஆடு, கடல் உணவுகள் என ஏதோ ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தலாம். சைவ உணவுகளே கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லோருக்கும் தமக்கு இந்த அலர்ஜி இருப்பது தெரியாது. அது தெரியாமல் கடிபட்ட பிறகு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட நேர்ந்தால் அது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதனால்தான் முழுமையாக குணமாகும்வரை அலர்ஜி ஏதும் ஏற்படாமலிருக்க, அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம்.
வெறிநாய்க் கடிக்காக சித்த மருத்துவத்தில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. ஆங்கில மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருந்துகளையும் ஒருங்கிணைந்த சிகிச்சையாக எடுத்துக்கொள்ளும்போது குணமாவது எளிதாகும்.
நாய்க்கடி பட்டவர்கள், 10-15 சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிரில் சேர்த்து பச்சடி போல சாப்பிடலாம். சின்ன வெங்காயத்துக்கு விஷமுறிவு குணம் உண்டு. நாய்க்கடியிலிருந்து சீக்கிரம் குணமாக, இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தவிர்க்க இது உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.