ஆபரேஷன் சிந்தூர் குறித்து ட்ரம்பின் பேச்சு: ``74 நாள்களில் 25-வது முறை..." - காங்கிரஸ் விமர்சனம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அது இந்தியா பாகிஸ்தான் போராக மாறும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், இந்த மோதலை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்குமிடையில் வணிகத் தொடர்பை அமெரிக்கா நிறுத்திக் கொள்வதாகக் கூறி இரு நாடுகளுக்கு மத்தியில் சமரசம் செய்து வைத்ததாக அமெரிக்க அதிபர் கூறினார்.

அப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை கடுமையாக விமர்சித்து அரசிடம் கேள்வி எழுப்பின. 'இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை' என இந்தியா முற்றிலுமாக மறுத்தது.
இந்த நிலையில், நடந்துவரும் மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `` அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு போரை நிறுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.
அவர் ஒரு முறை அல்ல, 24 முறை போரை நிறுத்தியதாக பேசியிருக்கிறார். இது நாட்டிற்கு அவமானகரமானது. இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைபாட்டை விளக்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரமே இன்னும் பேசிமுடியாத நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், ``இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தப் போரை தடுத்து நிறுத்தினேன். ஒருவேளை அதை அப்படியே விட்டிருந்தால் அது அணுசக்திப் போராகக் கூட மாறியிருக்கலாம்.
இரு நாடுகளிடமும் நீங்கள் போரைத் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் இனி வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன். அதன் பிறகுதான் போர் முடிவுக்கு வந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ட்ரம்பின் இந்த உரையைக் குறிப்பிட்டு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாடாளுமன்றத்தில் பஹல்காம் - சிந்தூர் தொடர்பான விவாதத்திற்கு உறுதியான தேதிகளை வழங்க மறுக்கிறது மோடி அரசு. விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கவும் மறுக்கிறார்.
அதனால் அதிபர் ட்ரம்ப் கடந்த 74 நாள்களில் 25-வது முறை இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகப் பேசுகிறார். ஆனால் இந்தியப் பிரதமர் இதுகுறித்து வாய் திறக்காமல் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்க மட்டுமே நேரம் ஒதுக்குகிறார்" என விமர்சித்திருக்கிறார்.