தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
`தாலிக்கு தங்கத்துடன் மணமகளுக்கு பட்டுப்புடவை' - உறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி
`மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்டா மாவட்டத்தில் பரப்புரை செய்து வரும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறையை சேர்ந்தவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
கும்பகோணத்தில் நெசவு தொழில் செய்பவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில், நெசவு தொழில் செய்பவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஜெயலலிதா கொண்டு வந்த திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கத்துடன் மணமகளுக்கு பட்டு சேலை வழங்கப்படும் என்றது கவனம் பெற்றது.

இதே போல் இன்று தஞ்சாவூர் சங்கம் ஹோட்டலில், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ``விவசாயிகளுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. நானும் ஒரு விவசாயி என்பதால் இதை நன்றாகவே அறிவேன். விவசாயத்தில் அதிக உற்பத்தி செய்யப்படும்போது விலை குறைந்து போகிறது. உற்பத்தி குறையும்போது விலை அதிகமாகிறது. நடவு செய்யும்போது ஒரு விலை இருக்கிறது அறுவடை செய்யும்போது ஒரு விலை இருக்கிறது.
தஞ்சை வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம்!
நெல்லுக்கும் கரும்புக்கும் விலை நிர்ணயம் செய்துவிட்டார்கள். மற்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சூழ்நிலைக்கும், விளைச்சலுக்கும் ஏற்றவாறு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயம் செய்வது போல் மற்ற பயிர்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த தொழில் நிலைத்து நிற்கும். தஞ்சை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம்.

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அவை மழையில் நனைவதால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் கூறினார்கள். எதிர்க்காலத்தில் அப்படிப்பட்ட நிலை இருக்காது. அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து, அதற்குரிய தொகையை உடனடியாக கொடுத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டு, அவை செயல்பாட்டில் இருந்தது. திமுக அரசு வந்த பிறகு அதில் முழுமையாக கவனம் செலுத்தாததால், பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. அதிமுக அரசு அமைந்த பிறகு அந்த குறைகள் சரிசெய்யப்படும்.
நான், ஆற்று மணல் அள்ளக்கூடாது என்று தடை விதித்தேன். ஆனால் இந்த அட்சியாளர்கள் அதை சரியாக கண்டுகொள்ளவில்லை. பல இடங்களில் மணல் கொள்ளை நடக்கிறது. சில நாட்களுக்கு முன் கரூர் வாங்கலில் ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு மணல் அள்ளப்பட்டுள்ளது அங்கிருந்த ஒருவர் தடுக்க முயன்றபோது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தாயாரும் சகோதரரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மனிதனுக்கு ஈரல் எப்படியோ, அப்படி விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை சேமித்து விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதிமுக அரசு அதை சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினோம்.

நதியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினோம். ஆதனூர் குமாரமங்கலத்தில் ஒரு தடுப்பணை கட்டினோம். அதை கட்டும் பணி முடிந்தும் இன்னும் நீர் தேக்கப்படாமல் இருக்கிறது. இதனால் ஆற்று நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கட்டிய அணையைக்கூட இந்த அரசு பயன்படுத்தவில்லை. காவிரி ஆற்று நீர் கடலில் கலக்கும் இடம் வரை 4 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டோம். அதற்கு இடம் தேர்வு செய்தோம். திமுக அரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. இப்போது நீர் வீணாக கடலில் கலக்கிறது.
எங்களுடைய அரசு இருந்தபோது பொதுப்பணித்துறை சார்பில் 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர் வாரினோம். இதற்காக ரூ. 1,240 கோடி ஒதுக்கினோம். எஞ்சிய ஏரிகள் இப்போது தூர் வாரப்படாமல் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் பங்களிப்போடு தூர் வாரப்படும். காவிரி நீர் கடலில் கலக்கும் வரை அதில் தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் இருக்கும் திட்டத்தினை பிரதமரிடம் கொடுத்தோம். நிறைவேறுவதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் எங்கள் தொடர் வலியுறுத்தலால் இன்று மத்திய அரசு நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து முதல் கட்டமாக ரூ. 990 கோடி அளித்துள்ளது. இதில் காவிரி ஆறு மாசுபடுவது தடுக்கப்படும்.

கோதவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு கடுமையான முயற்சி மேற்கொண்டோம். ஆனால் இப்போது கிடப்பில் கிடக்கிறது. அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கை காப்பதில் நான் சமரசமே செய்து கொண்டதில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. வழிப்பறி, பாலியல் சீண்டல் என தினமும் செய்திகள் வருகிறது. காவல்துறையை ஆளுங்கட்சி பிரமுகர்கள் சரியாக செயல்பட விடாததே இதற்கு காரணம். ஸ்காட்லாந்துக்கு இணையாக போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இன்று பலவீனமாக இருக்கிறது. தமிழக மக்கள் இன்று அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.