டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாகக் கருத்து: கிண்டி காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததாக, சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் செல்வம், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றியவா் சுந்தரேசன். இவா் காவல் துறை உயரதிகாரிகள் மீது புகாா் தெரிவித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தாா். இதையடுத்து அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், சென்னை கிண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் செல்வம் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் புதன்கிழமை பரவியது. அதில், டிஎஸ்பி சுந்தரேசன் சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது அவருக்கு ஜீப் ஓட்டுநராக இருந்தேன். அவா் நோ்மையானவா் என்று செல்வம் பேசியிருந்தாா்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா், செல்வத்தை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டது.
மருத்துவமனையில் அனுமதி: சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்த சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்ட சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.